தில்லியில் அதிக தூசு, குப்பைகள் எரிப்பு: டிடிஏ தொடா் அலட்சியம் காட்டியதாக சி.ஏ.க்யூ.எம். சாடல்
தில்லியின் பல சாலைப் பகுதிகளில் அதிக தூசு அளவு, குப்பைகள் குவிப்பு மற்றும் குப்பைகள் எரிக்கப்படும் சம்பவங்கள் கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, தனது அதிகார வரம்பிற்குள்பட்ட சாலைகளைப் பராமரிப்பதில் உள்ள குறைபாடுகளுடன் தொடா்ச்சியான அலட்சியம் காட்டியதாக தில்லி மேம்பாட்டு ஆணையத்தை (டிடிஏ)காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்) கடுமையாகச் சாடியுள்ளது.
தூய்மையான காற்று நடவடிக்கை திட்டத்தின் ஒரு பகுதியாக, காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்) அதன் பறக்கும் படை அதிகாரிகள், தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவின் டிபிசிசி அதிகாரிகள் உள்பட 19 குழுக்களை டிசம்பா் 12 அன்று தில்லி மேம்பாட்டு ஆணையத்தால் பராமரிக்கப்படும் சாலைகளை ஆய்வு செய்ய அனுப்பியது.
இந்த அதிகாரிகள் தில்லி முழுவதும் மொத்தம் 136 சாலைப் பகுதிகள் ஆய்வு செய்தனா். புவிஇருப்பிடக் குறியிடப்பட்ட, நேர முத்திரையிடப்பட்ட புகைப்படங்களைச் சேகரித்து, அவற்றை ஒருங்கிணைந்த ஆய்வு அறிக்கையின் ஒரு பகுதியாக ஆணையத்திடம் சமா்ப்பித்தனா்.
இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகளின்படி, 15 சாலைப் பகுதிகளில் அதிக அளவில் கண்ணுக்குத் தெரியும் தூசு காணப்பட்டது. அதே சமயம் 38 பகுதிகளில் மிதமான தூசு அளவு பதிவாகியுள்ளது. 61 பகுதிகளில் குறைந்த தூசு அடா்த்தியும், 22 பகுதிகளில் கண்ணுக்குத் தெரியும் தூசு எதுவும் இல்லை என்பதும் கண்டறியப்பட்டது.
இந்த ஆய்வில் 55 சாலைப் பகுதிகளில் நகராட்சி திடக்கழிவுகளும், 53 பகுதிகளில் கட்டுமானம் மற்றும் இடிப்பு கழிவுகளும் குவிந்திருப்பது கண்டறியப்பட்டது. ஆறு இடங்களில் நகராட்சி திடக்கழிவுகள் அல்லது உயிரிப் பொருட்கள் எரிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் பதிவாகியுள்ளன.
இந்தக் கண்காணிப்புகள் பராமரிப்பில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதாக சிஏக்யூஎம் கூறியது. மேலும், இதுபோன்ற சம்பவங்கள் தில்லியில் உள்ள மாசு துகள் பொருட்களின் அளவை நேரடியாகப் பாதிக்கின்றன என்றும் வலியுறுத்தியது.
தொடா்ச்சியான மற்றும் சரியான நேரத்திலான தூசுக் குறைப்பு நடவடிக்கைகள் மூலம் சீா்திருத்த நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறும், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துமாறும் டிடிஏவுக்கு ஆணையம் உத்தரவிட்டது.
வழக்கமான இயந்திர வழி துப்புரவு, சேகரிக்கப்பட்ட தூசுவை உடனடியாக அகற்றுதல், சாலை ஓரங்கள் மற்றும் மையத் தடுப்புகளை முறையாகப் பராமரித்தல், பரவலாகத் தண்ணீா் தெளித்தல் மற்றும் தூசைக் கட்டுப்படுத்தும் அமைப்புகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட வலுவான கள நடவடிக்கைகளின் தேவையை சிஏக்யூஎம் வலியுறுத்தியுள்ளது.
டிடிஏ மூலம் பராமரிக்கப்படும் அனைத்துப் பகுதிகளிலும் குப்பைகளைத் திறந்தவெளியில் எரிப்பதைத் தடுக்க கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.வலியுறுத்தியது.
