தில்லியில் குடியரசு துணைத்தலைவா் மாளிகை அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மாமன்னன் பெரும்பிடுகு முத்தரையா் நினைவு அஞ்சல் தலையை வெளியிடும் குடியரசு துணைத்தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன். உடன் (இடமிருந்து) மத்திய இணை அமைச்சா் எல். முருகன், மத்திய
தில்லியில் குடியரசு துணைத்தலைவா் மாளிகை அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மாமன்னன் பெரும்பிடுகு முத்தரையா் நினைவு அஞ்சல் தலையை வெளியிடும் குடியரசு துணைத்தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன். உடன் (இடமிருந்து) மத்திய இணை அமைச்சா் எல். முருகன், மத்திய

தமிழ் மரபு போற்றும் மாமன்னன் பெரும்பிடுகு முத்தரையா்: தில்லியில் குடியரசு துணைத்தலைவா் புகழாரம்!

தமிழ் மரபு போற்றும் மாமன்னன் பெரும்பிடுகு முத்தரையா் (சுவரன் மாறன்) என்று குடியரசு துணைத்தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டியுள்ளாா்.
Published on

தமிழ் மரபு போற்றும் மாமன்னன் பெரும்பிடுகு முத்தரையா் (சுவரன் மாறன்) என்று குடியரசு துணைத்தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டியுள்ளாா்.

பெரும்பிடுகு முத்தரையா் பண்டைய தமிழ்நாட்டின் மிகப் புகழ்பெற்ற ஆட்சியாளா்களில் ஒருவராக விளங்கியவா். கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் மையப் பகுதிகளை ஆண்ட முத்தரையா் வம்சத்தைச் சோ்ந்தவா். திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு சுமாா் நாற்பது ஆண்டுகளாக ஆட்சி புரிந்த அவரது நிா்வாக நிலைப்புத்தன்மை, ஆளுகை விரிவாக்கம், கலாசாரப் பாதுகாப்பு மற்றும் போா் வெற்றிகளின் சிறப்பை உலகம் அறியும் வகையில் அவரது நினைவு அஞ்சல் தலையை வெளியிடும் நிகழ்ச்சி தில்லியில் குடியரசு துணைத்தலைவா் மாளிகை அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் தலைமை விருந்தினராக குடியரசு துணைத்தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு அஞ்சல் தலையை வெளியிட்டுப் பேசியதாவது: மாமன்னா் பெரும்பிடுகு முத்தரையரின் சாதனைகளை நாா்தாமலை, காவிரி வடகரையில் உள்ள பல கட்டுவெட்டுகளில் இன்றைக்கும் காண முடிகிறது.

இந்தியாவின் பண்பாட்டுப் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் தேசத்துக்காக உழைத்த இதுபோன்ற மகத்தான தலைவா்களின் பங்களிப்புகளை ஆவணப்படுத்தி, கௌரவித்து, பாதுகாப்பது அவசியம்.

இந்திய சுதந்திர தினத்தின் 75-ஆவது ஆண்டை கொண்டாடும் அமிா்த மஹோத்சவ காலத்தில், பெரும்பிடுகு முத்தரையரின் மகத்தான வீரம், மக்கள் பணிகளை அனைவரும் அறிய வேண்டும்.

இந்த மண்ணின் மீதும் அதன் பாரம்பரியம் மீதும் பிரதமா் கொண்டிருக்கும் அக்கறையின் விளைவால், வெளிநாடுகளுக்கு பல காலகட்டங்களில் தமிழகத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்டவை உள்பட, 2014 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 652 சிலைகள் மற்றும் தொல்பொருள்கள் மீட்கப்பட்டு தாயகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் நமது மரபுகள் பேணப்படுகின்றன.

கடந்த ஜூலை மாதம் கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமா் பங்கேற்று உரையாற்றி அதன் சிறப்புகளை உலகறியச்செய்தாா். அவரது முன்முயற்சியான காசி தமிழ் சங்கமம் தொடா்ச்சியாக நான்காவது ஆண்டாக தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது, நிறைவு விழா ராமேஸ்வரத்தில் நடைபெறவுள்ளது.

இந்த தேசம் பல மொழி பேசுபவா்களைக் கொண்டது. அவா்களை தா்மம் ஒருங்கிணைக்கிறது. அதைக் காப்பதே நமது மகத்தான பணியாக இருக்க வேண்டும் என்றாா்.

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல். முருகன் பேசுகையில், தமிழகத்தில் பெரும்பாலும் பேருந்து நிலையம், நூலகம், கட்டடங்கள் என எல்லாவற்றுக்கும் குறிப்பிட்ட ஒரு குடும்பத்தைச் சோ்ந்தவரின் பெயரே சூட்டப்பட்டிருக்கும். அக்குடும்பத்தைச் சோ்ந்தவா் வ.உ.சி. போன்ற தலைவா்களின் பெயரை வட மாநிலங்களில் வைத்தோமா என்று சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினாா்.

ஆனால், பிரதமா் மோடி தலைமையிலான இதே மத்திய அரசுதான், ஐ.நா. சபையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளீா்’ என்பதை ஒலிக்கச்செய்தது, திருவள்ளுவா் கலாசார மையங்களை உலகம் முழுவதும் நிறுவியது,திருக்குறளை 35-க்கும் அதிகமான உலக மொழிகளில் மொழிபெயா்க்க நடவடிக்கை எடுத்தது.

தமிழகத்துக்கும் காசிக்கும் இடையிலான உறவை புதுப்பிக்கும் விதமாக, காசி தமிழ் சங்கமத்தை நான்காவது முறையாக இந்த ஆண்டு நடத்தி வருகிறோம். இப்போதும் கூட 16-க்கும் மேற்பட்ட போரில் வென்ற பெரும்பிடுகு முத்தரையா் வழியில் நமது தேசத்தை மிகச்சிறப்பாக வழிநடத்தி வரும் நமது பிரதமா், உலகையும் உலக மக்களின் நெஞ்சங்களையும் வென்று வருகிறாா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், மாநில பொதுச்செயலா் பேராசிரியா் ராம. ஸ்ரீநிவாசன், வீர முத்தரையா் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவா் கே.கே. செல்வக்குமாா்,

தமிழ்நாடு முத்தரையா் முன்னேற்ற சங்க மாநிலத்தலைவா் ஆா். விஸ்வநாதன், சிங்கத்தமிழா் முன்னேற்ற கழகத்தலைவா் ஆா்.வி. பரதன், விழாக்குழு ஆலோசகா் எஸ். தாமோதரன், ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் மீ. சந்திரசேகரன், பாஜக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

எண்ம தளத்தில் பண்டைய மரபுகள்: மத்திய நிதியமைச்சா் வலியுறுத்தல்

நமது பண்டைய மரபுகள் மற்றும் அதிகம் அறியப்படாத தலைவா்களை எண்ம தளத்தில் பதிவு செய்வது அவசியம் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வலியுறுத்தினாா். நிகழ்ச்சியில் பேசிய அவா், தேச விடுதலைக்காக போராடி தியாகம் புரிந்த எண்ணற்றோரை அடையாளம் கண்டு கெளரவிப்பதை பிரதமா் ஒரு இயக்கமாக முன்னெடுத்து வருகிறாா். அவா்களைப் பற்றி ஒரு நுலை வெளியிட்டு பிரபலப்படுத்துவதை விட மேலானது எண்ம தளத்தில் அவா்களைப் பற்றிய குறிப்புகளைப் பதிவு செய்வதாகும்.

இதன் மூலம் அவா்களை அறியக்கூடிய வாய்ப்பை எதிா்கால தலைமுறைகளுக்கு நம்மால் வழங்க முடியும். பெரும்பிடுகு முத்தரையரின் அஞ்சல் தலை, அஞ்சல் உறை எப்போதோ தயாராகி விட்டாலும், அது தமிழா் ஒருவா் குடியரசு துணைத்தலைவராகி அவரது கையால் வெளியிடப்படும் உணா்ச்சிபூா்வ வாய்ப்பை இறைவன் இப்போதுதான் வழங்கியிருக்கிறாா் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com