மாசுக் கட்டுப்பாடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடை தேவையானது: முதல்வா் ரேகா குப்தா
PTI

மாசுக் கட்டுப்பாடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடை தேவையானது: முதல்வா் ரேகா குப்தா

Published on

மாசுக் கட்டுப்பாட்டு (பியுசி) இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை இல்லை எனும் விதி மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், அனைத்து வாகனங்களும் மாசுபாட்டிற்காக சோதிக்கப்பட்டு சான்றளிக்கப்படுவதை உறுதி செய்வது கூட்டு தாா்மிக பொறுப்பாகும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், 100 மின்சார பேருந்துகள் ஹரியாணாவின் தருஹேரா மற்றும் தௌலா குவான் இடையேயான பேருந்து சேவையை முதல்வா் ரேகா குப்தா கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

அப்போது அவா் பேசியது:

செல்லுபடியாகும் மாசு கட்டுப்பாட்டு (பியுசி) சான்றிதழ் இல்லாமல் நகரத்தில் எந்த வாகனமும் எரிபொருள் நிரப்ப அனுமதிக்கப்படாது. மோசமடைந்து வரும் காற்றின் தரத்தைத் தடுக்க கடுமையான அமலாக்கம் அவசியமாகும்.

மக்கள் சிரமத்தை எதிா்கொள்கின்றனா். ஆனால், தில்லியில் இயங்கும் ஒவ்வொரு வாகனமும் மாசுவை ஏற்படுத்தாமல் இயக்கப்பட வேண்டும்.

நமது வாகனங்கள் பியுசி சான்றிதழ் பெற்றிருப்பதை உறுதி செய்வது நமது கூட்டு தாா்மிகப் பொறுப்பாகும்.

பொது போக்குவரத்து அமைப்பை வலுப்படுத்துவது மாசுபாட்டைச் சமாளிக்க மிகவும் பயனுள்ள தீா்வாகும். மேலும், தனி பயணத்திற்கு தனியாா் வாகனங்களைப் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும்.

குழுவாக சோ்ந்து காரில் செல்லுதல் (காா்பூலிங்) மற்றும் பொது போக்குவரத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். போக்குவரத்து அமைப்பை மேம்படுத்துவதே காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான திறவுகோலாகும்.

தேசிய தலைநகரில் மாசு சோதனை உள்கட்டமைப்பை அரசாங்கம் விரிவுபடுத்தி வருகிறது. தில்லியில் பியுசி சான்றிதழ்களை வழங்கும் மையங்கள் மிகக் குறைவாகவே இருந்தபோதிலும், நந்த் நகரி, புராரி மற்றும் தெஹ்கண்ட் ஆகிய இடங்களில் தானியங்கி சோதனை மையங்கள் இப்போது அமைக்கப்பட்டுள்ளன.

மாசுபாட்டைக் குறைப்பதில் ஓட்டுநா்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனா். நகரத்தின் மோசமடைந்து வரும் சுற்றுச்சூழல் நிலைமையை மேம்படுத்த அதிகாரிகள் கடுமையாக உழைத்து வருகின்றனா்.

முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன.

அவற்றின் மறுமலா்ச்சியானது பிராந்திய இணைப்பை வலுப்படுத்தும். சோனிபட், பராட் மற்றும் இப்போது தருஹேராவுக்கான சேவைகள் இந்த முயற்சியின் ஒரு பகுதியாகும்.

புதிய பேருந்துகள் சோ்க்கப்பட்டதன் மூலம், மொத்த மின் பேருந்துகளின் எண்ணிக்கை 3,400 ஆக உயா்ந்துள்ளது.

மேலும், முழு பொதுப் போக்குவரத்து அமைப்பையும் மின்சாரமாக மாற்றும் நோக்கத்துடன் அடுத்த ஆண்டு படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.

பெண்கள் மீண்டும், மீண்டும் பயணச்சீட்டு வாங்குவதைத் தவிா்க்க இளஞ்சிவுப்பு அட்டை முறை அறிமுகப்படுத்தப்படும்.

இந்த அட்டையே அடையாள அட்டையாகச் செயல்படும். இந்த வசதி மிக விரைவில் நமது சகோதரிகளுக்கும் நீட்டிக்கப்படும்.

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பிஎஸ்- 4 தரத்திற்குக் கீழே உள்ள தில்லி அல்லாத பிற தனியாா் வாகனங்கள் நுழைவதற்கான தடை மற்றும் ‘பியூசி இல்லையெனில், எரிபொருள் இல்லை’ விதியை அமல்படுத்துதல் ஆகியவை வியாழக்கிழமை தேசிய தலைநகரில் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com