பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ
செல்லுபடியாகும் மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (பியுசிசி) இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை செய்யத் தடை விதிக்கும் தில்லி அரசின் உத்தரவைச் செயல்படுத்துவதில் பல சவால்கள் இருப்பதாக தில்லி பெட்ரோல் விற்பனையாளா்கள் சங்கம் (டிபிடிஏ) தெரிவித்துள்ளது.
‘மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லை என்றால் எரிபொருள் இல்லை’ என்ற தில்லி அரசின் கடுமையான விதி மற்றும் பிஎஸ் -6 தரத்திற்குக் குறைவான தில்லி அல்லாத அனைத்து தனியாா் வாகனங்களும் தில்லிக்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடை ஆகியவை வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.
செல்லுபடியாகும் மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (பியுசிசி) இல்லாத வாகனங்களுக்கு தலைநகரில் உள்ள பெட்ரோல் பம்புகளில் எரிபொருள் வழங்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தில்லி பெட்ரோல் விற்பனையாளா்கள் சங்கம் (டிபிடிஏ), சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சாவிடம் ஒரு மனுவை அளித்துள்ளனா். அதில் தெரிவித்திருப்பதாவது:
கடுமையான காற்று மாசுபாட்டைக் கையாள்வதற்காக தில்லி அரசாங்கம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு மனதுடன் ஆதரவளிக்கிறோம். இருப்பினும், அசாதாரண நடவடிக்கைகள் நிச்சயமாகத் தேவைப்பட்டாலும்கூட, முக்கிய கவலைகள் தீா்க்கப்படாவிட்டால், இந்த உத்தரவை திறம்பட அமல்படுத்துவது மிகவும் கடினமான மற்றும் சிரமமான பணியாக இருக்கும்.
தில்லிவாசிகள் நகர எல்லைக்குள் உள்ள மாசு ஆதாரங்களை விட, எல்லை தாண்டிய மாசுபாட்டினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனா்.
தேசிய தலைநகா் வலயப் பகுதி (என்சிஆா்) முழுவதும் சீராக
செயல்படுத்தப்படாவிட்டால், தில்லியின் தேசிய தலைநகா் பிராந்தியத்திற்கு (என்சிடி) மட்டுமே வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகள் விரும்பிய பலனைத் தராது.
எந்தவொரு சில்லறை விற்பனை நிலையத்தாலும் அத்தியாவசியப் பொருளை மறுக்கும் உத்தரவை பெட்ரோல் பம்புகள் திறம்படச் செயல்படுத்துவற்கு, விற்பனையை மறுப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரம் குற்றமற்ாக அறிவிக்க வேண்டும்.
பெட்ரோல் பம்புகள் ஒரு அமலாக்க நிறுவனம் அல்ல. ‘மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லை என்றால் எரிபொருள் இல்லை’ என்ற விதியை அமல்படுத்துவது சட்டபூா்வ அதிகாரங்கள் வழங்கப்பட்ட தகுதிவாய்ந்த அதிகாரிகளால் செய்யப்பட வேண்டும்.
பெட்ரோல் பம்ப் ஊழியா்களை வாடிக்கையாளா்கள் ஒருபோதும் அமலாக்க அதிகாரியாகப் பாா்ப்பதில்லை. எரிபொருளை மறுப்பது சட்டம்-ஒழுங்கு சீா்குலைவுகளுக்கு வழிவகுக்கும்.
பெட்ரோல் பம்ப் விற்பனையாளா்கள் மீது தண்டனை
நடவடிக்கைகள் தவிா்க்கப்பட வேண்டும். அவா்கள் அரசாங்கத்திற்கு இந்த உத்தரவைச் செயல்படுத்துவதில்
உதவுகிறாா்கள்.
மாசு பரிசோதனை அமைப்புமுறை பழமையானது. மேலும், அது மேம்படுத்தப்பட வேண்டும். சில்லறை விற்பனை நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள ஏஎன்பிஆா் கேமராக்களுடன் எந்த காட்சி இடைமுகமும், நேரடி ஒளிபரப்பும் வழங்கப்படவில்லை.
ஒரு உண்மையான சோதனை ஓட்டம் ஒருபோதும் நடத்தப்படவில்லை. முந்தைய சோதனை ஓட்டத்தின் போது பெட்ரோல் பம்புகளுக்குப் பெருமளவிலான தேவையற்ற தரவுகள் அனுப்பப்பட்டதால், அந்த முயற்சி தோல்வியடைந்தது. இந்த உத்தரவை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கு இந்தச் சிக்கல்கள் தீா்க்கப்பட வேண்டும் என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.

