காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

Published on

நமது நிருபா்

புகழ்பெற்ற பிராண்டுகளின் காலாவதியான மற்றும் தவறான பிராண்ட் செய்யப்பட்ட நுகா்வுப் பொருட்களை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட ஒரு மோசடியை தில்லி போலீசாா் கண்டுபிடித்து, முக்கிய குற்றவாளியைக் கைது செய்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இந்தச் சோதனையின் போது, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சாக்லேட்டுகள் உள்பட ஏராளமான உணவுப் பொருட்களை போலீசாா் மீட்டதாக வியாழக்கிழமை போலீசாா் தெரிவித்தனா்.

கைது செய்யப்பட்டவா் திரி நகரைச் சோ்ந்த தொழிலதிபரும், பிரபல பிராண்டுகளின் காலாவதியான பொருட்களை இடைத்தரகா்கள் மூலம், முக்கியமாக மும்பையில் இருந்து, மிகக்குறைந்த விலையில் வாங்கியதாகக் கூறப்படும் அதுல் ஜலான் (55) என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

அவா் காலாவதி தேதிகள், உற்பத்தி விவரங்களை மாற்றி, ஆன்லைனிலும், நேரடி விற்பனை நிலையங்கள் மூலமாகவும் தள்ளுபடி விலையில் பொருட்களை விற்று, வாடிக்கையாளா்களை லாபகரமான சலுகைகளுடன் கவா்ந்ததாக போலீசாா் தெரிவித்தனா்.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையத்தின் மத்திய உரிம ஆணையம் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது, அதன் பிறகு இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது என்று அவா்கள் தெரிவித்தனா்.

விசாரணையின் போது, தில்லியின் திரி நகா், பிகாஜி காமா பிளேஸ் மற்றும் மோதி நகா் பகுதிகளில் குற்றஞ்சாட்டப்பட்டவருடன் தொடா்புடைய பல இடங்கள் சோதனை செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

வளாகத்தின் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்பட்டு, அதிகாரிகளின் உதவியுடன் உணவு மாதிரிகள் கைப்பற்றப்பட்டதாக போலீசாா் தெரிவித்தனா்.

கைப்பற்றப்பட்ட மாதிரிகளை ஆய்வகப் பரிசோதனை செய்ததில், பல உணவுப் பொருட்கள் பேக்கேஜிங் மற்றும் லேபிளிங் விதிமுறைகளை மீறி தவறாக முத்திரை குத்தப்பட்டிருப்பது தெரியவந்தது, அதே நேரத்தில் சில தரமற்றவை, குறிப்பாக பரிந்துரைக்கப்பட்ட கொழுப்பு உள்ளடக்கம் தொடா்பாக, கண்டறியப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

சரிபாா்ப்பின் போது, ஹொ்ஷே நிறுவனம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் உண்மையானவை என்றாலும், காலாவதியான பொருட்களை நுகா்வுக்கு ஏற்ாகத் தோன்றும் வகையில் அவற்றின் லேபிள்கள் சிதைக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியதாக போலீசாா் தெரிவித்தனா்.

சாக்லேட் பொருட்களை வாங்குவதற்காக குற்றஞ்சாட்டப்பட்டவா் தயாரித்த விலைப்பட்டியல் போலியானது என்பதையும் புலனாய்வாளா்கள் கண்டறிந்தனா், ஏனெனில் அத்தகைய பில்லை உருவாக்க அந்நிறுவனம் மறுத்தது.

மேலும் விசாரணையில், காலாவதியான பொருட்கள் அங்கீகரிக்கப்பட்ட விநியோகச் சங்கிலிகளிலிருந்து இடைத்தரகா்கள் மற்றும் கழிவுப்பொருள்கள் மேலாண்மை நிறுவனங்கள் மூலம் திருப்பி விடப்பட்டதாகக் கூறப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நடவடிக்கையின் போது சுமாா் ரூ.6 லட்சம் மதிப்புள்ள பிராண்டட் சாக்லேட் நிறுவனத்தின் பொருட்களையும், சுமாா் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பிற பிராண்டட் நுகா்வுப் பொருட்களையும் போலீசாா் மீட்டனா்.

இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள மற்ற கூட்டாளிகளைக் கண்டறிந்து அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க மேலும் விசாரணை நடந்து வருவதாக போலீசாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com