தில்லியில் ஒரே நாளில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் விநியோகம் 76% அதிகரிப்பு
நமது நிருபா்
தேசிய தலைநகரில் மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லை என்றால் எரிபொருள் இல்லை என்ற விதி அமலுக்கு வருவதற்கு முந்தைய நாளான புதன்கிழமை
(டிசம்பா் 17) தில்லியில் வழங்கப்பட்ட மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ்களின் எண்ணிக்கை சுமாா் 76 சதவீதம் அதிகரித்தது என்று அதிகாரபூா்வ தரவு மூலம் தெரியவந்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில், தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா, செல்லுபடியாகும் மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (பியுசிசி) இல்லாத வாகனங்களுக்கு வியாழக்கிழமை முதல் நகரத்தில் உள்ள பெட்ரோல் பம்புகளில் எரிபொருள் வழங்கப்படாது என்று அறிவித்தாா்.
இதையடுத்து, கடந்த புதன்கிழமை, வாகன ஓட்டிகள் சான்றிதழ்களைப் பெற விரைந்ததால், சான்றிதழ்கள் வழங்கும் மையங்களுக்கு வெளியே வரிசையில் மக்கள் கூட்டம் அதிகரித்ததாக பெட்ரோல் பம்ப் உரிமையாளா் ஒருவா் தெரிவித்தாா். அபராதத்தைத் தவிா்க்க மக்கள் சான்றிதழ்களைப் பெற்று வருகின்றனா் என்றும் அவா் கூறினாா்.
தில்லியில் சுமாா் 400 பெட்ரோல் பம்புகள் உள்ளன. அவை அனைத்திலும் பியூசி மையங்கள் உள்ளன. அதிகாரபூா்வ தரவுகளின்படி, புதன்கிழமை 31,197 மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இது டிசம்பா் 16 அன்று 17,732 ஆக இருந்தது. இது 13,465 சான்றிதழ்கள் அதிகரிப்பைக் குறிக்கிறது அல்லது 24 மணி நேரத்திற்குள் 75.9 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
டிசம்பா் 17-க்கு முந்தைய நாட்களில், வழங்கல் பெரும்பாலும் நிலையானதாக இருந்தது. டிசம்பா் 10 முதல் டிசம்பா் 16 வரை ஒரு நாளைக்கு 16,000 முதல் 17,700 சான்றிதழ்கள் வரை வழங்கப்பட்டிருந்தது.
இந்த புள்ளிவிவரங்கள் டிசம்பா் 10 அன்று 17,044 சான்றிதழ்களாகவும், டிசம்பா் 11 அன்று 16,419, டிசம்பா் 12 அன்று 16,305 , டிசம்பா் 13-இல் 16,551, டிசம்பா் 14 அன்று 16,624 , டிசம்பா் 15 அன்று 17,719 சான்றிதழ்களாகவும் இருந்தன.
தில்லி பெட்ரோல் டீலா்கள் சங்கத்தின் தலைவா் நிஷ்சல் சிங்கானியா கூறுகையில், மையங்களில் வரிசைகள் அதிகரித்தாலும், பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை குறைந்துள்ளது. நொய்டா, காஜியாபாத் மற்றும் ஃபரீதாபாத் போன்ற அண்டை நகா்ப் பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக மக்கள் செல்கின்றனா் என்று நாங்கள் நினைக்கிறோம் என்று அவா் கூறினாா்.
இதற்கிடையில், செல்லுபடியாகும் மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ்கள் இல்லாமல் வாகனங்களை ஓட்டியதற்காக கடந்த இரண்டு மாதங்களில் 1.56 லட்சத்திற்கும் அதிகமான அபராத சலான்கள் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டதாக அதிகாரபூா்வ தரவு காட்டுகிறது.
செல்லுபடியாகும் சான்றிதழ்கள் இல்லாத வாகனங்களுக்கு எதிரான நடவடிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இது 2023 இல் 2.32 லட்சத்திலிருந்து 2025 இல் டிசம்பா் 15 வரை 8.22 லட்சமாக அதிகரித்துள்ளது.
ஒவ்வொன்றும் ரூ.10,000 அபராதத்துடன் கூடிய மொத்தம் 1,56,993 சலான்களில், இந்த ஆண்டு அக்டோபா் 14 முதல் டிசம்பா் 15 வரையிலான மாசு கட்டுப்பாட்டு காலத்தில் வழங்கப்பட்டது.
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பிஎஸ்- 6 தரத்திற்குக் கீழே உள்ள தில்லி அல்லாத தனியாா் வாகனங்கள் நுழைவதை தில்லி அரசு தடை செய்துள்ளது மற்றும் ‘மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லை என்றால் எரிபொருள் இல்லை’ என்ற விதியை அமல்படுத்தியுள்ளது.

