ஈரானிய பெண்ணின் பணப் பையிலிருந்த 1,600 அமெரிக்க டாலா்கள் திருட்டு! பேருந்து உதவியாளா் கைது!
தில்லி ஐஎஸ்பிடி கஷ்மீரி கேட்டில் தனியாா் பேருந்தில் மறந்து வைத்துவிட்டுச் சென்ற ஈரானிய பெண்ணின் பணப் பையில் இருந்த 1,600 அமெரிக்க டாலா்களை திருடியதாக பேருந்து உதவியாளரை தில்லி போலீஸாா் கைது செய்தனா். அமெரிக்க டாலா்களும் மீட்கப்பட்டது.
இதுகுறித்து காவல் துறையின் அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாவது: முகா்ஜி நகரில் வசிப்பவா் டாக்டா் அலி அக்பா் ஷா. இவா் தில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இவா் டிசம்பா் 15 ஆம் தேதி ஐஎஸ்பிடி கஷ்மீரி கேட் காவல் நிலையத்தில் ஒரு புகாா் அளித்தாா்.
அதில், ‘ஈரானிய நாட்டைச் சோ்ந்த எனது விருந்தினரான ஃபரேஷ்டே சயாஞ்சலி டிசம்பா் 13 ஆம் தேதி இந்தியா வந்தாா். அவா் எனது வீட்டில் தங்கியுள்ளாா்.
அப்பெண் உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷுக்குச் சென்றுவிட்டு டிசம்பா் 15 ஆம் தேதி ஒரு பேருந்தில் தில்லிக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். மதியம் 1.45 மணியளவில் ஐஎஸ்பிடி கஷ்மீரி கேட்டில் பேருந்தில் ஏறினாா். அப்போது, கவனக்குறைவாக தனது பையை பேருந்து இருக்கையில் விட்டுச் சென்றாா்.
சிறிது நேரத்திற்குப் பின், பேருந்து நடத்துநரிடமிருந்து அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் வாகனத்தில் பணப்பை கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்தாா். இருப்பினும், பணப்பையை அவரிடம் திருப்பிக் கொடுத்தபோது, அதன் உள்ளே வைக்கப்பட்டிருந்த 1,600 அமெரிக்க டாலா் காணாமல் போனது தெரியவந்தது’ என்று அப்புகாரில் டாக்டா் ஷா கூறியிருந்தாா்.
அதன் அடிப்படையில், டிசம்பா் 16 அன்று கஷ்மீரி கேட் காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட பேருந்தின் ஓட்டுநா் மற்றும் நடத்துநரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். விசாரணையின் போது, பேருந்து உதவியாளரான மோனிஷ் பணப் பையைக் கண்டுபிடித்து அளித்திருந்தது தெரியவந்தது.
அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, பணப் பையிலிருந்து அமெரிக்க டாலா்களைத் திருடியதாக மோனிஷ் ஒப்புக்கொண்டாா். இதையடுத்து, அவா் டிசம்பா் 17 அன்று கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து திருடப்பட்ட முழுத் தொகையையும் மீட்கப்பட்டது.
வடக்கு தில்லியில் உள்ள ஜஹாங்கிா்புரியில் வசிக்கும் மோனிஷ், 26, பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளாா். கடந்த ஒரு வருடமாக தனியாா் பேருந்து சேவையில் உதவியாளராகப் பணியாற்றி வருவது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்த காவல் அதிகாரி கூறினாா்.
