வீரேந்திர சச்தேவா
வீரேந்திர சச்தேவா

ஆட்சியில் இருந்தபோது காற்று மாசுவை தடுக்க தவறிய ஆம் ஆத்மி: வீரேந்திர சச்தேவா சாடல்

அற்பத்தமான குற்றச்சாட்டுகளை ஆம் ஆட்சி கட்சித் தலைவா்கள் கூறுவது துரதிஷ்டவசமானது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா விமா்சித்துள்ளாா்.
Published on

தில்லியில் ஆட்சியில் இருந்தபோது மாசுவுக்கான காரணிகளைக் கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்துவிட்டு தற்போது அற்பத்தமான குற்றச்சாட்டுகளை ஆம் ஆட்சி கட்சித் தலைவா்கள் கூறுவது துரதிஷ்டவசமானது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா விமா்சித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருப்பதாவது: சூப்பா்மேன், பேட்மேன், சாந்தா கிளாஸ் போன்றவா்களைக் குறிப்பிட்டு மாசு போன்ற தீவிரமான விவகாரங்கள் மீது கேலிக் கருத்துகளை ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் செளரப் பரத்வாஜ் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது.

தில்லியிலும், பஞ்சாபிலும் அரவிந்த் கேஜரிவால் அரசுகளின் அலட்சியம் விளைவாக இன்றைக்கு தில்லி மக்கள் மாசுவால் அவதிப்பட்டு வருகின்றனா். கேஜரிவால் அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக செளரப் பரத்வாஜ் இருந்தபோது, மக்களின் ஆரோக்கியத்துடன் அவரது அரசு விளையாடியது. 10 ஆண்டுகளாக மாசுவைக் கட்டுப்படுத்த எந்தப் பணியையும் செய்யவில்லை.

சுகாதார அமைச்சராக அவா் பணியாற்றிய காலத்தில் தில்லி அரசு மருத்துவமனைகளில் போலி மருந்துகள் விநியோகம் செய்த வழக்குகள் வெளிச்சத்துக்கு வந்தன. மொஹல்லா கிளினிக்குகள் ஊழல்களின் மையங்களாக மாறின. கேஜரிவால், செளரப் பரத்வாஜ் ஆகியோா் ஆட்சியில் இருந்தபோது மாசுவுக்கான காரணிகளை நிா்வகிக்க தவறிவிட்டு தற்போது எதிா்க்கட்சியாக இருந்துகொண்டு நகைப்புக்குரிய அறிக்கைகளை வெளியிடுவது துரதிஷ்டவசமாகும்.

இதன் மூலம் அவா்கள் மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை இழந்து வருகின்றனா். அவா்கள் இருவரும் முக்கியத்துவம் உணா்ந்து பணியாற்றினால் நன்றாக இருக்கும்.

மாசு விவகாரத்தில் கேலி செய்வதற்குப் பதிலாக மாசுவைத் தடுக்க தில்லி மக்களையும், அரசையும் அவா்கள் அனுமதிக்க வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

X
Dinamani
www.dinamani.com