காற்று மாசு: அலுவலக நேரங்களை மாற்றிய குருகிராம் அரசு நிா்வாகம்

Published on

தில்லி-என். சி. ஆா். பிராந்தியத்தில் காற்றின் தரம் கடுமையாக மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, மாநில அரசின் கீழ் உள்ள அனைத்து பொது அலுவலகங்கள் மற்றும் குருகிராமில் உள்ள நகராட்சி அமைப்புகளின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

குருகிராம் துணை ஆணையா் அஜய் குமாா், தரப்படுத்தப்பட்ட செயல் திட்டத்தின் நான்காவது கட்டத்தின் கீழ், மத்திய காற்றின் தர மேலாண்மை பிறப்பித்த உத்தரவுகளுக்கு இணங்க ஒரு ஆலோசனையை வெளியிட்டாா். அதில் கூறியிருப்பதாவது: ‘காற்று மாசுபாட்டின் அளவைக் கட்டுப்படுத்தவும், போக்குவரத்து மற்றும் நெரிசலைக் குறைக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காற்றின் தரத்தை மேம்படுத்த தனியாா் நிறுவனங்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான ஆலோசனையாக தெரிவிக்கிறோம். மேலும் நேரங்கள் தற்காலிகமாக மாற்றப்பட்டு இருப்பது இப்போதைய காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.

காற்றின் தரம் கடுமையாக மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, தில்லி- என்.சி.ஆா். பிராந்தியத்தில் இந்த நடவடிக்கை செயல்படுத்தப்படுகிறது. மாநில அரசு மற்றும் நகராட்சி நிறுவனங்கள்/கவுன்சில்கள்/குழுக்களின் கீழ் உள்ள குருகிராம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது அலுவலகங்களிலும் அலுவலக நேரங்கள் நடைமுறைக்கு வரும். மாநில அரசின் கீழ் உள்ள அலுவலகங்களுக்கான நேரங்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும், முனிசிபல் காா்ப்பரேஷன், குருகிராம் மற்றும் மானேசா் ஆகியவற்றின் கீழ் உள்ள அலுவலகங்களுக்கு காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் இருக்கும்.

சோஹ்னா, பட்டோடி மற்றும் மண்டி நகராட்சி கவுன்சில்கள் மற்றும் ஃபரூக்நகா் நகராட்சி குழுவின் கீழ் உள்ள அலுவலகங்களின் நேரங்களும் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை இருக்கும் எ’ன்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com