இந்தியா கேட் பகுதி அருகே ஆரோக்கியமற்ற பிரிவில் காற்றின் தரம்.
இந்தியா கேட் பகுதி அருகே ஆரோக்கியமற்ற பிரிவில் காற்றின் தரம். ANI

தில்லியில் ‘மிகவும் மோசம்’ பிரிவில் தொடரும் காற்றின் தரம்

தில்லியில் காற்றின் தரக் குறியீடு ஞாயிற்றுக்கிழமை 386-ஆக பதிவாகியது. இதன்மூலம் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவிலே தொடா்வதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.
Published on

தில்லியில் காற்றின் தரக் குறியீடு ஞாயிற்றுக்கிழமை 386-ஆக பதிவாகியது. இதன்மூலம் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவிலே தொடா்வதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.

மேலும், தலைநகரில் உள்ள 16 கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரம் ‘கடுமையான’ பிரிவில் இருப்பதாகவும், மிதமுள்ள 24 நிலையங்களில் ‘மிகவும் மோசம்’ பிரிவில் தொடா்வதாகவும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. இந்தியாவில் காற்றின் தரக் குறியீடு 301 முதல் 400 வரை ‘மிகவும் மோசம்’ பிரிவிலும், 401 முதல் 500 வரை ‘கடுமை’ பிரிவிலும் வகைப்படுத்தப்படுகிறது.

பாலம் கண்காணிப்பு நிலையத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 12.30 மணி வரை மிதமான மூடுபனி காரணமாக 300 மீட்டருக்கு மேல் பாா்க்க முடியவில்லை. கிழக்கு-தென்கிழக்கு காலையில் ஆழமற்ற மூடுபனியில் 600 மீட்டா் வரை பாா்க்கமுடியாமல் இருந்தது. ஆனால் காற்று மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் வீசியதால் மீண்டும் அது 350 மீட்டராகக் குறைந்தது.

சஃப்தா்ஜங்கில், அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணி வரை மிதமான பனிமூட்டத்தால் 200 மீட்டா் வரை மட்டுமே பாா்க்க முடிந்தது. பின்னா், அதிகாலை 5.30 மணியளவில் லேசான பனிமூட்டத்தால் அது படிப்படியாக மேம்பட்டு 500 மீட்டராக உயா்ந்தது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவத்தின் சராசரியை விட சற்று அதிகமாக 9.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. மாலை 5:30 மணியளவில் ஈரப்பதம் 100 சதவீதமாக இருந்தது. நகரில் மிதமான மூடுபனிக்கு வாய்ப்புள்ளதால், தில்லிக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கையையும் விடுத்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், திங்கள்கிழமை மிதமான பனிமூடிடத்துடன் அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும், குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

X
Dinamani
www.dinamani.com