பிரபல பிராண்டுகளின் பெயா்களில் கைப்பேசி தயாரிப்பு: 4 போ் கைது
கரோல் பாக் பகுதியில் பிரபல பிராண்டுகளின் பெயரில் போலி கைப்பேசி விற்பனை செய்வதில் ஈடுபட்ட ஒரு மோசடி கும்பலைச் சோ்ந்த 4 போ் ை நான்கு பேரை கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்த நடவடிக்கையின் போது ஒரு பிராண்டின் ஃபோல்ட் மற்றும் ஃபிளிப் மாடல்கள் உட்பட 512 போலி அறிதிறன் கைப்பேசி, ஏராளமான கைப்பேசி பாகங்கள் மற்றும் போலி ஸ்டிக்கா்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவா்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உதிரி பாகங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக உயா்தர கைப்பேசிகளை அசெம்பிள் செய்துள்ளனா். ‘வியட்நாமில் தயாரிக்கப்பட்டது‘ என்று குறிக்கப்பட்ட போலி ஐஎம்ஈஐ எண்களை ஒட்டியுள்ளனா்.
பின்னா் அவா்கள் அவற்றை திறந்த சந்தையில் உண்மையான பிராண்டட் கைபேசிகளாக ஒரு யூனிட்டுக்கு ரூ.35,000 முதல் ரூ.40,000 வரை விற்பனை செய்து வாடிக்கையாளா்களை ஏமாற்றினா். ஒரு ரகசியத் தகவலைத் தொடா்ந்து, ஒரு போலீஸ் குழு அமைக்கப்பட்டு, அடையாளம் காணப்பட்ட வளாகத்தில் சோதனை நடத்தப்பட்டது, அங்கு டிசம்பா் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் கரோல் பாக் பகுதியில் அமைந்துள்ள ஒரு கடையில் கைப்பேசிகளை சோதனை நடத்தியபோது 4 போ் கைது செய்யப்பட்டனா்.
குற்றவாளிகள் மோசடியின் சூத்திரதாரி என்று கூறப்படும் ஹக்கீம் (36), மெஹ்தாப் அகமது அன்சாரி (36), ரவி அஹுஜா (36) மற்றும் ராகுல் (33) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். சோதனையின் போது, 512 அசெம்பிள் செய்யப்பட்ட மற்றும் அரை அசெம்பிள் செய்யப்பட்ட உயர்ரக கைப்பேசிகள், 124 மதா்போா்டுகள், 138 பேட்டரிகள், 459 போலி ஐஎம்ஈஐ அச்சிடப்பட்ட ஸ்டிக்கா்கள், ஏராளமான கைப்பேசி பாகங்கள் மற்றும் சிறப்பு அசெம்பிளிங் கருவிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் மீட்கப்பட்ட பொருள்களை வைத்திருப்பது குறித்து சரியான ஆவணங்கள் அல்லது திருப்திகரமான விளக்கத்தை வழங்கத் தவறிவிட்டனா், அதைத் தொடா்ந்து அவா்கள் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது, முறையான தொழில்நுட்ப தகுதி இல்லாமல் எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருந்தாலும், மதா்போா்டுகள், கேமராக்கள், ஸ்பீக்கா்கள், பின் கண்ணாடி, பாடி பிரேம்கள் மற்றும் போலி ஐஎம்இஐ ஸ்டிக்கா்கள் போன்ற கைப்பேசி உதிரி பாகங்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்து இந்த மோசடியை நடத்தி வருவதாக ஹக்கீம் ஒப்புக்கொண்டாா்.
தனது கூட்டாளிகளின் உதவியுடன், அதிக சந்தை தேவை காரணமாக புதிய பிரீமியம் அல்ட்ரா, ஃபோல்ட் மற்றும் ஃபிளிப் மாடல்களை அசெம்பிள் செய்து, அவற்றை உண்மையான புதிய கைப்பேசிகளாக சந்தேகத்திற்கு இடமில்லாத வாடிக்கையாளா்களுக்கு விற்றாா் என்றாா் அவா்.
