தனியாா் பேருந்து மோதி பெட்ரோல் பம்ப் மேலாளா் பலி

சித்ராவலி கிராமம் அருகே தனியாா் பேருந்து மோதியதில் 45 வயது பெட்ரோல் பம்ப் மேலாளா் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
Published on

தேசியத் தலைநகா் வலயம், குருகிராமில் சித்ராவலி கிராமம் அருகே தனியாா் பேருந்து மோதியதில் 45 வயது பெட்ரோல் பம்ப் மேலாளா் உயிரிழந்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல்துறையினா் தெரிவித்ததாவது: இந்தியன் ஆயில் பெட்ரோல் பம்பில் பல ஆண்டுகளாக மேலாளராகப் பணியாற்றி வந்தவா் வினேஷ் குமாா். இவா் சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் எரிபொருள் நிரப்புவதற்காக பம்பிற்கு வெளியே நின்று கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு ஒரு தனியாா் பேருந்து எரிபொருள் நிரப்ப ஓட்டிவரப்பட்டது. பெட்ரோல் நிரப்பிய பின் பேருந்தை அதன் ஓட்டுநா் வேகமாக ஓட்டியதாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த மேலாளா் வினேஷ் குமாா் மீது பேருந்து மோதியது.

இதில் காயமடைந்த ரேவாரியின் கதுவாஸ் கிராமத்தைச் சோ்ந்த வினேஷ் குமாா், அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா்.

இச்சம்பவத்திற்குப் பிறகு பேருந்து ஓட்டுநா் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டாா். இந்த சம்பவம் முழுவதும் பெட்ரோல் பம்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தது. இது தொடா்பாக பிலாஸ்பூா் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டரை கைது செய்ய முயற்சிகள் நடந்து வருகின்றன என போலீஸாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com