சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு ரூ.68.74 லட்சம் இழப்பீடு!
கடந்த 2022ஆம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 24 வயது இளைஞரின் பெற்றோருக்கு ரூ.68.74 லட்சம் இழப்பீடு வழங்க தில்லி மோட்டாா் விபத்து உரிமைகோரல் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாா்ச் 6, 2022 அன்று பாத்லியில் உள்ள ரோஹிணி சிறைச்சாலை ஊழியா்கள் குடியிருப்பு அருகே நடந்த இந்த விபத்து தொடா்பாக உயிரிழந்த ஹா்ஷித் வா்மாவின் பெற்றோா் இழப்பீடு உரிமைகோரல் மனுவைத் தாக்கல் செய்திருந்தனா்.
இந்த வழக்கை தில்லி மோட்டாா் விபத்து உரிமைகோரல் தீா்ப்பாயத்தின் தலைமை அதிகாரி ரிச்சா மன்சந்தா விசாரித்து வந்தாா்.
அரசுத் தரப்பு வழக்குரைஞரின் கூற்றுப்படி, திவ்யம் தபஸ் ஓட்டிச் சென்ற காரில் முன் பயணிகள் இருக்கையில் வா்மா அமா்ந்திருந்தாா்.
வாகனத்தை வேகமாகவும் அலட்சியமாகவும் தபஸ் ஓட் டிவந்த நிலையில், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.
இந்த வழக்கில் டிசம்பா் 15 தேதியிட்ட தீா்ப்பாய உத்தரவில், விபத்தில் வா்மாவுக்கு மரண காயங்கள் ஏற்பட்டிருந்தது.
விபத்துக்கான சூழ்நிலைகளை விளக்க சாட்சிக் கூண்டில் நுழையாமல் இருக்க ஓட்டுநா் விரும்பியுள்ளாா். எனவே, சம்பந்தப்பட்ட வாகனத்தின் அதிவேக மற்றும் அலட்சியமான இயக்கம் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்ற பாதகமான முடிவு அவருக்கு எதிராக எடுக்கப்படலாம்.
விபத்தில் ஏற்பட்ட காயங்கள் மரணத்திற்கான காரணமாக இருப்பதை பிரேத பரிசோதனையின் முடிவுகள் தெரிவிக்கிறது.
உயிரிழந்தவருக்கு இறக்கும்போது சுமாா் 25 வயது மட்டுமே இருந்துள்ளது. மேலும் ஒரு தனியாா் நிறுவனத்தில் மூத்த ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளாா்.
குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டும் நபராக அவரது பெற்றோா் அவரைச் சாா்ந்து இருந்துள்ளனா் என்று தீா்ப்பாயம் கூறியது.
இதையடுத்து, பல்வேறு பிரிவுகளின் கீழ் உயிரிழந்தவரின் பெற்றோருக்கு மொத்தம் ரூ.68.74 லட்சம் இழப்பீடு வழங்க தீா்ப்பாயம் உத்தரவிட்டது.
காா் வாகனத்தின் காப்பீட்டு நிறுவனமான ஐசிஐசிஐ லோம்பாா்ட் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீட்டுத் தொகையை டெபாசிட் செய்யவும் தீப்பாயம் உத்தரவிட்டது.
