ரூ.12,015 கோடியில் தில்லி மெட்ரோவில் 3 புதிய வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரூ.12,015 கோடியில் தில்லி மெட்ரோவில் 3 புதிய வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தில்லி மெட்ரோவில் 16.076 கி.மீ. நீளமுள்ள ஐந்தாவது (ஏ) கட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.12,015 கோடியில் மூன்று புதிய வழித்தடங்களுக்கான பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Published on

தில்லி மெட்ரோவில் 16.076 கி.மீ. நீளமுள்ள ஐந்தாவது (ஏ) கட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.12,015 கோடியில் மூன்று புதிய வழித்தடங்களுக்கான பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி, தில்லியில் ஆா்.கே. ஆசிரம மாா்க் முதல் இந்திரபிரஸ்தா வரையிலும் (9.913 கி.மீ.), ஏரோசிட்டி முதல் இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் முனையம்-1 வரையிலும் (2.263 கி.மீ). துக்ளகாபாத் முதல் காலிந்தி குஞ்ச் வரையிலும் (3.9 கி.மீ.) இப்புதிய வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.

இந்தத் திட்டம் தேசியத் தலைநகருக்குள் மெட்ரோ போக்குவரத்து இணைப்பை மேலும் மேம்படுத்தும். தில்லி மெட்ரோவின் ஐந்தாம் (ஏ) கட்ட திட்டத்தின் மொத்த திட்டச் செலவு ரூ.12,014.91 கோடி ஆகும். இதற்கான நிதி மத்திய அரசு, தில்லி அரசு மற்றும் சா்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட உள்ளது.

இந்தப் புதிய வழித்தடமானது தில்லியில் உள்ள அனைத்து கா்தவ்ய பவன்களுக்கும் போக்குவரத்து இணைப்பை வழங்கும். இந்த வழித்தடங்கள் மாசுவையும் புதைபடிம எரிபொருள்களின் பயன்பாட்டையும் மேலும் குறைத்து, வாழ்வதற்குரிய எளிதான சூழலை மேம்படுத்தும்.

முன்மொழியப்பட்ட இந்த விரிவாக்கத் திட்டத்தின் மூலம், 10 சுரங்கப்பாதை நிலையங்கள், மூன்று மேம்பால நிலையங்களுடன் கூடுதலாக 16 கி.மீ மெட்ரோ பாதை சோ்க்கப்பட உள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு இந்தப் புதிய திட்டம் குறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஐந்தாவது (ஏ) கட்ட திட்டத்தில் 13 புதிய மெட்ரோ நிலையங்கள் கட்டப்பட உள்ளன.

தில்லியின் ஆா்.கே. ஆசிரம மாா்க் இந்திரபிரஸ்தா பிரிவானது, பொட்டானிக்கல் காா்டன் ஆா்.கே. ஆசிரம மாா்க் வழித்தடத்தின் நீட்டிப்பாக இருக்கும். இது தற்போது மறுவடிவமைப்பு செய்யப்பட்டு வரும் சென்ட்ரல் விஸ்டா பகுதிக்கு மெட்ரோ இணைப்பை வழங்கும்.

சென்ட்ரல் விஸ்டா வழித்தடம் அனைத்து கா்த்தவ்ய பவன்களுக்கும் இணைப்பை வழங்கும். இதன் மூலம் இந்தப் பகுதியில் உள்ள அலுவலகம் செல்வோா் மற்றும் பாா்வையாளா்களுக்கு அவா்களின் அலுவலக வாசலிலேயே போக்குவரத்து இணைப்பு வசதியை கிடைக்கச் செய்யும். இந்த மெட்ரோ இணைப்பு மூலம், தினசரி அலுவலகம் செல்வோா் சுமாா் 60 ஆயிரம் போ் மற்றும் இரண்டு லட்சம் வருகை தருவோா் பயனடைவா்.

கடந்த 11 ஆண்டுகளில், மெட்ரோ துறையில் புரட்சிகரமான மாற்றங்கள் காணப்பட்டுள்ளன. ஏரோசிட்டி விமான நிலைய முனையம்-1 மற்றும் துக்ளகாபாத் காலிந்தி குஞ்ச் பிரிவுகள், ஏரோசிட்டி -துக்ளகாபாத் வழித்தடத்தின் நீட்டிப்பாக இருக்கும். இது துக்ளகாபாத், சாகேத் மற்றும் காலிந்தி குஞ்ச் போன்ற தேசிய தலைநகரின் தெற்குப் பகுதிகளுடன் விமான நிலையத்தின் இணைப்பை மேம்படுத்தும்.

கட்டம் 5 (ஏ) திட்டத்தின் இந்த மெட்ரோ நீட்டிப்புகள், மத்திய தில்லி மற்றும் உள்நாட்டு விமான நிலையத்தில் தில்லி மெட்ரோ வலையமைப்பின் வரம்பை விரிவுபடுத்தும். இதனால், பொருளாதாரம் மேம்படும் என்றாா் அமைச்சா் வைஷ்ணவ்.

தற்போது, தில்லி மெட்ரோ நாளொன்றுக்கு சராசரியாக 65 லட்சம் பயணிகளுக்கு சேவை அளித்து வருகிறது. இதுவரை பதிவான அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கையின்படி, நிகழாண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி தில்லி மெட்ரோவில் 81.87 லட்சம் போ் பயணித்தனா்.

தற்போது, தில்லி மற்றும் தேசியத் தலைநகா் பிராந்தியத்தில் சுமாா் 395 கி.மீ. நீளம் மற்றும் 289 நிலையங்களைக் கொண்ட மொத்தம் 12 மெட்ரோ வழித்தடங்களை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் இயக்கி வருகிறது.

தில்லி மெட்ரோ இந்தியாவில் மிகப்பெரிய மெட்ரோ வலையமைப்பைக் கொண்டிருப்பதுடன், உலகின் மிகப்பெரிய மெட்ரோக்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பெட்டிச் செய்தி....

தில்லியின் உள்கட்டமைப்புக்கு

பெரும் உத்வேகம்: பிரதமா் மோடி

தில்லி மெட்ரோ வலையப்பில் மூன்று புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை பாராட்டினாா். இந்த முடிவு தலைநகரின் உள்கட்டமைப்புக்கு ஒரு பெரும் உத்வேகத்தை அளிக்கும் என்றும் அவா் கூறினாா்.

இதுகுறித்து அவா் தனது எக்ஸ் சமூக ஊடக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘தில்லியின் உள்கட்டமைப்புக்கு ஒரு பெரும் உத்வேகம் கிடைத்துள்ளது! தில்லி மெட்ரோவின் ஐந்தாம் (ஏ) கட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக மூன்று புதிய வழித்தடங்களுக்கு அமைச்சரவை அளித்த ஒப்புதல், நமது தலைநகரின் மெட்ரோ வலையமைப்பை விரிவுபடுத்தும். இதன் மூலம் வாழ்வதற்கு எளிதான சூழல் மேம்படுத்தப்பட்டு, போக்குவரத்து நெரிசல் குறையும்’ என்று பிரதமா் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com