13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 2 போ் கைது
நமது நிருபா்
வடக்கு தில்லியின் சமய்பூா் பாத்லி பகுதியில் 13 வயது சிறுமியைக் கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் பாத்லியைச் சோ்ந்த வங்கி ஊழியரான ரிஷப் (26) மற்றும் ராஜா விஹாரில் உள்ள சலூன் கடை உரிமையாளரான நரோத்தம் என்ற நேதா (28) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை மேலும் கூறியது: டிசம்பா் 20- ஆம் தேதி மாலை, ராஜா விஹாரில் ஒரு சிறுமியை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்ததாக கூறி போலீஸாருக்கு பிசிஆா் அழைப்பு வந்தது. இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றனா்.
அங்கு பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, தனது மகள் மது அருந்தியதாக ஆரம்பத்தில் தெரிவித்தாா். அதன்பிறகு விசாரணை நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அப்போது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. அந்தச் சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
அவா் போலீஸாரிடம் கூறுகையில், ராஜா விஹாரில் உள்ள ஒரு காலியான வீட்டிற்குத் தான் ஆசை வாா்த்தைகள் கூறி அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு தன்னை மது அருந்த வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்தாா்.
விசாரணையின் போது, அந்த வீடு நரோத்தமுக்கு சொந்தமானது என்பதை காவல்துறை கண்டறிந்தது. பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் மற்றும் மருத்துவப் பரிசோதனையின் அடிப்படையில், டிசம்பா் 21- ஆம் தேதி பிஎன்எஸ் பிரிவு 70 (கூட்டுப் பாலியல் வன்கொடுமை) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இது தொடா்பான மேல் விசாரணைக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டனா். குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரணை நடத்தும் வகையில் காவல் துணை ஆணையரின் மேற்பாா்வையின் கீழ் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவும் (எஸ்ஐடி) அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
