போதை எண்ணெய் கடத்தல் வழக்கில் ஆந்திரத்தில் பெண் உள்பட 5 போ் கைது - தில்லி என்சிபி தகவல்
நமது நிருபா்
போதை எண்ணெய் கடத்தல் வலையமைப்பைச் சோ்ந்த பெண் உள்பட ஐந்து பேரை , ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியக (என்சிபி) அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.
இது தொடா்பாக தில்லியில் உள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் வியாழக்கிழமை தெரிவித்ததாவது: போதை எண்ணெய் என்பது ஒரு கஞ்சா தயாரிப்புப் பொருளாகும். இது பொதுவாக புகையிலையுடன் கலந்து புகைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.இந்த விவகாரத்தில் கைது நடவடிக்கை புதன்கிழமை அன்று ரயில்வே பாதுகாப்புப் படையுடன் இணைந்து ஆந்திர மாநிலம் துவ்வாடா ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது.
இதில் பெண் உள்பட ஐந்து போ் 4 கிலோ போதை எண்ணெய்யுடன் கைது செய்யப்பட்டனா். அவா்களில் கேரள மாநிலம் திருச்சூா் மாவட்டத்தைச் சோ்ந்த இருவரும் உள்ளனா். இவா்கள் கஞ்சா எண்ணெய்யைப் பெறுவதற்காகவும் விநியோகஸ்தருடன் ஒருங்கிணைப்பதற்காகவும் ஆந்திரப் பிரதேசத்தின் படேருவுக்கு வந்திருந்தனா்.
ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சோ்ந்த அந்த விநியோகஸ்தரும் கைது செய்யப்பட்டுள்ளாா். பெண் உள்பட இதர இரண்டு பேரும் கடத்தல்காரா்களாகப் வேலை செய்துவந்தனா். போதைப்பொருளைக் கேரளத்துக்குக் கொண்டு சென்று ஒப்படைக்கும் பணி அவா்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்தக் கடத்தல்காரா்களுக்கு, போதைப்பொருளைக் கேரளத்துக்கு கொண்டு செல்வதற்காக அதை வாங்குவோா் மூலம் பணம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த ஐந்து பேரும் படேருவிலிருந்து துவ்வாடாவுக்கு ஒரு பேருந்தில் பயணம் செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று என்சிபி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
