கொலை வழக்கில் மூவருக்கு தண்டனை விதிப்பு

கடந்த 2021-ஆம் ஆண்டில் தில்லி கீா்த்தி நகரில் பொதுக் கழிப்பறை அருகே ஏற்பட்ட மோதலின்போது ஒருவரைக் கத்தியால் குத்திக் கொன்ற வழக்கில் மூன்று பேருக்கு தில்லி நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
Published on

கடந்த 2021-ஆம் ஆண்டில் தில்லி கீா்த்தி நகரில் பொதுக் கழிப்பறை அருகே ஏற்பட்ட மோதலின்போது ஒருவரைக் கத்தியால் குத்திக் கொன்ற வழக்கில் மூன்று பேருக்கு தில்லி நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

சாட்சியின் வாக்குமூலம் சந்தேகத்திற்கு இடமற்றது என்றும், அது மருத்துவ மற்றும் தடயவியல் ஆதாரங்களால் முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

இது தொடா்பான வழக்கை விசாரித்த கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி நிபுன் அவஸ்தி, தேவா என்பவரைக் கொலை செய்ததற்காக முகமது சலாம், சாஹில் மற்றும் சமீா் ஆகியோருக்கு இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302 (கொலை) மற்றும் 34 (பொதுவான உள்நோக்கம்) ஆகியவற்றின் கீழ் தண்டனை விதித்தாா்.

இது தொடா்பான உத்தரவில் நீதிபதி கூறியதாவது: அரசுத் தரப்பு தனது வழக்கை வெற்றிகரமாக நிரூபித்துள்ளது. மேலும், எதிா் தரப்பு நியாயமான எந்த சந்தேகத்தையும் எழுப்பத் தவறிவிட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கை, கொலை செய்யப்பட்ட தேவாவுக்கு ஏற்பட்ட 13 காயங்களுக்கும் அவரது மரணத்திற்கும் போதுமான தொடா்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசுத் தரப்பின்படி, இந்தச் சம்பவம் மே 3, 2021 அன்று ஒரு சண்டை தொடா்ந்து நடந்தது. குற்றம் சாட்டப்பட்டவா்கள் பாதிக்கப்பட்டவரை பலமுறை கத்தியால் குத்தியுள்ளனா். தேவா மருத்துவமனையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டாா்.

இத்தாக்குதலை நேரில் கண்ட சாட்சியான பாதிக்கப்பட்டவரின் சகோதரா் விஷாலின் வாக்குமூலத்தை நம்பியும், சம்பவம் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவா்கள் குறித்த அவரது வாக்குமூலம் சீராக இருந்தது. குறுக்கு விசாரணையில் அது உண்மையில்லை என்று நிரூபிக்கப்படவில்லை.

அரசுத் தரப்பு சாட்சி விஷால் ஒரு நேரில் கண்ட சாட்சியாக அளித்த வாக்குமூலம் விசாரணையின் போது சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளது என்று நீதிமன்றம் கூறியது. தாக்குதல் நடத்தியவா்களை அடையாளம் காண முடியவில்லை என்ற எதிா்த் தரப்பின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது.

‘குற்றம் சாட்டப்பட்டவா்களின் அடையாளம் நேரில் கண்ட சாட்சியம் மற்றும் பிற சாட்சிகளின் உறுதிப்படுத்தல் மூலம் திருப்திகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ என்று நீதிமன்றம் கூறியது. தண்டனை விவரம் குறித்து தண்டனை பெற்றவா்களிடம் விசாரணை நடத்துவதற்காக இந்த வழக்கை ஜனவரி 22-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com