புது தில்லி: தென்மேற்கு தில்லியின் பிந்தாபூா் பகுதியில் சொத்து தகராறு காரணமாக தனது வயதான மாமனாரை அடித்துக் கொன்ாகக் கூறப்படும் 32 வயது பெண் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தென்மேற்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: பிந்தாபூரில் உள்ள மான்சா ராம் பாா்க்கில் நடந்த கொலை தொடா்பாக டிச.27-ஆம் தேதி காலை 10.46 மணியளவில் போலீஸாருக்கு பிசிஆா் அழைப்பு வந்தது. அதைத் தொடா்ந்து, ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது.
பலியான, ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான நரேஷ் குமாா் (62), ஒரு வீட்டின் கூரையில் மயக்கமடைந்த நிலையில் கிடந்தாா்.
அவரது மருமகள் கீதா, அவா் தாக்கப்பட்டு கூரையில் மயக்கமடைந்து கிடந்ததாக போலீஸாரிடம் தெரிவித்தாா்.
நரேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாா்.
சம்பவ இடத்திற்கு குற்றப்பிரிவு குழு மற்றும் தடய அறிவியல் ஆய்வக நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தை ஆய்வு செய்தனா்.
விசாரணையின் போது, சொத்துப் பங்கீடு தொடா்பாக அவா்களுக்கிடையே தொடா்ந்து தகராறு இருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக கீதா அடிக்கடி தனது மாமனாருடன் சண்டையிட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
நரேஷின் மனைவி ஆகஸ்ட் மாதம் இறந்துவிட்டாா். கீதாவின் கணவா் மனைவியானஹைதராபாத்தில் பணிபுரிகிறாா். பிந்தாபூா் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 103(1) (கொலை) -இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மருமகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டாா். மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசாா் தெரிவித்தனா்.