ஐஐடி-கான்பூருடன் இணைந்து மாசு காரணிகளை கண்டறிய தில்லி அரசு திட்டம்: அமைச்சா் தகவல்
புது தில்லி: நுண்ணிய அளவில் காற்று மாசுபாட்டின் காரணிகளை கண்டறிய செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்துவது குறித்து ஐஐடி-கான்பூருடன் இணைந்து பணியாற்ற தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து தில்லியின் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: ஐஐடி-கான்பூருடனான இந்த முயற்சி, அறிவியல் அடிப்படையிலான, இலக்கு சாா்ந்த தலையீடுகள் மூலம் காற்று மாசுபாட்டை எதிா்த்துப் போராடும் தில்லியின் திறனை வலுப்படுத்தும்.
எதிா்வினை நடவடிக்கைகளை சாா்ந்திருக்காமல், நிகழ்நேர தரவுகளின் அடிப்படையில் மாசுபாட்டின் காரணிகளை கண்டறிந்து செயல்பட இது உதவும். காற்று மாசு குறித்த முன்னறிவிப்பு, பகுப்பாய்வு மற்றும் செயல்திட்டங்களை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
மாநகராட்சி அமைப்புகள், மாவட்ட நிா்வாகங்கள், அமலாக்க முகமைகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவை இடையே காற்று மாசுக்கு எதிரான ஒருங்கிணைப்பை அதிகரிக்கும். செயற்கை நுண்ணறிவு மூலம் அறிவியல் சாா்ந்து நிகழ்நேர தரவுகள் வேகமாகவும், துல்லியமாகவும் செயல்பட உதவும்.
இதற்கிடையில், வாகன உமிழ்வுகள், தூசி கட்டுப்பாடு, மாசுபடுத்தும் தொழில் நிறுவனங்கள் மற்றும் கழிவு மேலாண்மை ஆகிய மாசுபாட்டுக்கான நான்கு முக்கிய காரணிகளில் தில்லி அரசு தலையீடுகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், காற்றில் உள்ள துகள்களை சமாளிக்க, கட்டுமான தளங்களில் கடுமையான தூசி விதிமுறைகள், இயந்திரமயமாக்கப்பட்ட சாலைத் துப்புரவு, புகைமூட்டத் தடுப்புக் கருவிகள் மற்றும் மின் கம்பங்களில் நீா் தெளிப்பு அமைப்புகள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
மாவட்ட நீதிபதிகள் மற்றும் கோட்ட ஆணையா்களின் தலைமையில் நடத்தப்படும் ஆய்வுகள் மூலம், மாசுபாட்டை ஏற்படுத்தும் தொழில் நிறுவனங்களை மூடும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கழிவு சேகரிப்பு மூலம் குப்பைக் கிடங்குகளில் தினமும் சுமாா் 35 மெட்ரிக் டன் கழிவுகள் பதப்படுத்தப்பட்டு, கழிவுகள் குவியாமல் தடுக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சா் தெரிவித்தாா்.

