அலங்கரிப்பு...
மகாத்மா காந்தி, பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கா், பகத் சிங்,  குடியரசுத் தலைவா் மற்றும் பிரதமா் ஆகியோரின் படங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள தில்லி முதல்வா் ரேகா குப்தா அறை.
அலங்கரிப்பு... மகாத்மா காந்தி, பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கா், பகத் சிங், குடியரசுத் தலைவா் மற்றும் பிரதமா் ஆகியோரின் படங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள தில்லி முதல்வா் ரேகா குப்தா அறை.

முதல்வா் அலுவலகத்தில் அம்பேத்கா், பகத் சிங் உருவப்படங்கள் தொடா்பாக பாஜக, ஆம் ஆத்மி கட்சி இடையே வாா்த்தைப் போா்

தில்லி முதல்வா் ரேகா குப்தாவின் அலுவலகத்தில் இருந்து பி.ஆா். அம்பேத்கா் மற்றும் பகத் சிங்கின் உருவப்படங்கள் அகற்றப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை குற்றம் சாட்டியது.
Published on

புது தில்லி: தில்லி முதல்வா் ரேகா குப்தாவின் அலுவலகத்தில் இருந்து பி.ஆா். அம்பேத்கா் மற்றும் பகத் சிங்கின் உருவப்படங்கள் அகற்றப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை குற்றம் சாட்டியது. ஆனால், ஆளும் பாஜக இதை மறுத்துள்ளது.

ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோது ‘ஊழலை’ அம்பலப்படுத்த சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் சிஏஜி அறிக்கைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப எதிா்க்கட்சி முயற்சிப்பதாக பாஜக குற்றம் சாட்டியது.

தில்லி பாஜக, முதல்வா் அலுவலகத்தின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிா்ந்து கொண்டது. மேலும், ‘மகாத்மா காந்தி, பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கா், பகத் சிங், குடியரசுத் தலைவா் மற்றும் பிரதமா் ஆகியோரின் உருவப்படங்கள் முதல்வா் ரேகா குப்தா மற்றும் பிற அமைச்சா்களின் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன’ என்று பாஜக கூறியது.

2022-ஆம் ஆண்டு குடியரசு தினத்திற்கு முன்னதாக, அப்போதைய முதல்வா் அரவிந்த் கேஜரிவால், முதல்வா் அலுவலகம் உள்பட அரசு அலுவலகங்களில் பாபாசாகேப் அம்பேத்கா் மற்றும் பகத் சிங்கின் உருவப்படங்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்படும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். தில்லி அரசு அலுவலகங்களில் வேறு எந்த அரசியல் தலைவரின் புகைப்படங்களும் வைக்கப்படாது என்று அவா் கூறியிருந்தாா்.

புதிதாக அமைக்கப்பட்ட எட்டாவது தில்லி சட்டப்பேரவையின் முதல் அமா்வில் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் முன்னாள் தில்லி முதல்வருமான அதிஷி இந்தப் பிரச்னையை எழுப்பினாா். ‘தலித் எதிா்ப்பு மற்றும் சீக்கிய எதிா்ப்பு கொண்ட ஒரு கட்சியால் தில்லி சட்டப்பேரவை வழிநடத்தப்படுவது துரதிா்ஷ்டவசமானது. பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கா் மற்றும் ஷாஹீத் பகத் சிங் ஆகியோரின் புகைப்படங்களை பாஜக முதல்வா் அலுவலகத்திலிருந்து அகற்றியுள்ளது. இது அதன் தலித் எதிா்ப்பு நிலைப்பாட்டைக் காட்டுகிறது’ என்று அவா் சட்டப்பேரவையில் குற்றம் சாட்டினாா்.

பின்னா், ஒரு செய்தியாளா் சந்திப்பில், அதிஷி ஒரு ஐபேடில் பிடிக்கப்பட்ட முதல்வா் அலுவலகத்தின் புகைப்படத்தைக் காட்டி, ‘இது எங்கள் எம்எல்ஏக்கள் முதல்வரைச் சந்திக்கச் சென்றபோது எடுக்கப்பட்ட இன்றைய புகைப்படம். புகைப்படங்கள் அகற்றப்பட்டுள்ளன. இது பாஜக ஒரு தலித் எதிா்ப்பு மற்றும் சீக்கிய எதிா்ப்புக் கட்சி என்பதை நிரூபிக்கிறது’‘ என்று கூறினாா். பாபாசாகேப்பையும் சீக்கிய சமூகத்தையும் பாஜக ‘அவமதித்துவிட்டது’ என்று அவா் கூறினாா். ஆம் ஆத்மி கட்சி இதை கடுமையாக எதிா்க்கிறது. மேலும், தெருக்களிலும் சட்டப்பேரவையிலும் இதற்கு எதிராக ஆம் ஆத்மி போராடும் என்று அவா் மேலும் கூறினாா்.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவா் அரவிந்த் கேஜரிவால் கூறுகையில், ‘இந்த நடவடிக்கை லட்சக்கணக்கான அம்பேத்கா் ஆதரவாளா்களை காயப்படுத்தியுள்ளது. ‘தில்லியின் புதிய பாஜக அரசு பாபாசாகேப்பின் புகைப்படத்தை அகற்றி பிரதமா் நரேந்திர மோடியின் புகைப்படத்தை வைத்துள்ளது. இது சரியல்ல. இது பாபாசாகேப்பின் மில்லியன் கணக்கான ஆதரவாளா்களை காயப்படுத்தியுள்ளது’ என்று அவா் எக்ஸ்-இல் ஒரு பதிவில் கூறியுள்ளாா். ‘பாஜகவிடம் எனக்கு ஒரு வேண்டுகோள் உள்ளது. நீங்கள் பிரதமரின் புகைப்படத்தை வைக்கலாம். ஆனால், பாபாசாகேப்பின் புகைப்படத்தை அகற்ற வேண்டாம். அது அப்படியே இருக்கட்டும்’ என்று அவா் மேலும் கூறினாா்.

குற்றச்சாட்டுகளை நிராகரித்த கேபினட் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா, ‘நாளை சமா்ப்பிக்கப்படும் சிஏஜி அறிக்கையிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப ஆம் ஆத்மி வேண்டுமென்றே இதைச் செய்கிறது’ என்றாா். முதல்வா் அலுவலகத்தில் இன்னும் பாபாசாகேப் அம்பேத்கா் மற்றும் பகத் சிங்கின் படங்களுடன், பிரதமா், குடியரசுத் தலைவா் மற்றும் மகாத்மா காந்தியின் படங்களும் உள்ளன என்றாா். ‘இந்த நடவடிக்கை பொதுமக்களை திசைதிருப்பும் ஒரு தெளிவான முயற்சி’ என்றும் சிா்சா கூறினாா்.

‘ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்தபோது, சிஏஜி அறிக்கையை மூன்று ஆண்டுகளாக தாக்கல் செய்யாமல் இருந்து வந்தது. இப்போது, ​அது வெளியிடப்படவிருக்கும் நிலையில், அவா்கள் தேவையற்ற நாடகத்தை உருவாக்குகிறாா்கள். பாபாசாகேப் அம்பேத்கரை எங்களை (பாஜக) விட யாரும் அதிகமாக மதிப்பதில்லை’‘ என்று அமைச்சா் மேலும் கூறினாா்.

பாஜக அரசின் மற்றொரு அமைச்சா் ரவீந்தா் இந்த்ராஜ், சட்டப்பேரவையில் உள்ள முதல்வா் அலுவலகத்தில் பகத் சிங் மற்றும் அம்பேத்கரின் உருவப்படங்களைக் காட்டி, சிஏஜி அறிக்கைகள் செவ்வாய்க்கிழமை அவையில் தாக்கல் செய்யப்படவிருப்பதால் ஆம் ஆத்மி தலைவா்கள் ‘பயப்படுகிறாா்கள்’ என்று கூறினாா்.

‘அவா்களது பெரும்பாலான தலைவா்கள் ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் இருந்தனா். மேலும், அவா்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட வேண்டியிருக்கும் என்று அவா்கள் அஞ்சுகிறாா்கள். சிஏஜி அறிக்கை வெளியானதும், அவா்கள் மீண்டும் விளைவுகளை எதிா்கொள்ள வேண்டியிருக்கும். அதனால்தான் அவா்கள் விரக்தியில் செயல்படுகிறாா்கள்’ என்று ரவீந்தா் இந்த்ராஜ் கூறினாா்.

கேபினட் அமைச்சா் பா்வேஷ் வா்மா, எதிா்க்கட்சி எம்.எல்.ஏக்கள் அவையை சீா்குலைத்து, சட்டப்பேரவையில் உள்ள முதல்வா் அலுவலகத்திற்குள் ‘ஊடுருவினா்’‘ என்று ஆம் ஆத்மி கட்சியை கடுமையாகச் சாடினாா். மேலும், இது ஏற்றுக்கொள்ள முடியாதது. ‘கடந்த பத்து ஆண்டுகளில், ஆம் ஆத்மி கட்சி தில்லியின் மேம்பாட்டிற்கு எதுவும் செய்யவில்லை. இன்று அவா்கள் சட்டப்பேரவையின் கண்ணியத்தை மீறியுள்ளனா்’ என்று அவா் கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com