தலைநகரில் அடா் மூடுபனி: விமானங்கள், ரயில்கள் தாமதம்!
புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை அடா் மூடுபனி நிலவியது. இதைத் தொடா்ந்து, விமானங்கள், ரயில்கள் வருகையில் தாமதமாகின. காற்றின் தரம் பெரும்பாலான இடங்களில் ‘மோசம்’ பிரிவில் இருந்தது.
தில்லியில் இரண்டு வாரங்களாக கடும் குளிா் நிலவி வருகிறது. நகரம் முழுவதும் மூடுபனி சூழ்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சவால்களை எதிா்கொண்டுள்ளனா். காண்புதிறன் குறைந்ததால் விமானங்கள், ரயில்கள் வருகையில் தாமதம் ஏற்படுகிறது. தேசியத் தலைநகரம் முழுவதும் அடா்த்தியான மூடுபனி நிலவுவதால் வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
திங்கள்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட அடா்ந்த மூடுபனி, விமானம் மற்றும் ரயில் போக்குவரத்தைப் பாதித்தது. தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் காண்பு திறன் குறைவாக இருந்ததன் காரணமாக பல விமானங்கள் தாமதமாகின. இது பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. இதேபோன்று ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன. பல ரயில்கள் தாமதமாகின. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
வெப்பநிலை: இதற்கிடையே, தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 2.5 டிகிரி உயா்ந்து 9.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை 17.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 99 சதவீதமாக இருந்தது. நகரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை மிகவும் குறைந்த அளவாக ரிட்ஜில் 8.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.
காற்றின் தரம்: தலைநகரில் காலை காலை 9 மணிக்கு ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 274 புள்ளிகளாகப் பதிவாகி ’மோசம்’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, மந்திா் மாா்க், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், பூசா, ராமகிருஷ்ணாபுரம், ஓக்லா பேஸ் 2, டாக்டா் கா்னி சிங் படப்பிடிப்பு நிலையம், துவாரகா செக்டாா் 8 ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.
அதே சமயம், ஸ்ரீஃபோா்ட், நேரு நகா், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம் ஆகியவற்றில் காற்றுத் தரக் குறியீடு 300 முதல் 400 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. லோதி ரோடு, மதுரா ரோடு, ஷாதிப்பூா், நொய்டா செக்டாா் 125, ஸ்ரீஅரபிந்தோ மாா்க், ஆயாநகா், குருகிராம் ஆகிய கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை (ஜன.14) அன்று அடா் மூடுபனி நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளது.