பிரதமா் நரேந்திர மோடி
பிரதமா் நரேந்திர மோடி

இன்று 150-ஆவது நிறுவன தினத்தைக் கொண்டாடும் இந்திய வானிலை ஆய்வுத் துறை பிரதமா் பங்கேற்கிறாா்

இந்திய வானிலை ஆய்வுத் துறை தனது 150-ஆவது நிறுவன தினத்தை செவ்வாய்க்கிழமை (ஜன.14) கொண்டாடுகிறது.
Published on

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: இந்திய வானிலை ஆய்வுத் துறை தனது 150-ஆவது நிறுவன தினத்தை செவ்வாய்க்கிழமை (ஜன.14) கொண்டாடுகிறது. இந்த நிகழ்வில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று அதிநவீன வானிலை கண்காணிப்புத் தொழில் நுட்பங்களுக்கான அமைப்புகளை தொடங்கிவைக்கிறாா்.

இது குறித்து பிரதமா் அலுவலகம் கூறியிருப்பது வருமாறு: இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150-ஆவது நிறுவன தினம் ஜன.14- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தில்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் இந்தக் கொண்டாட்டங்களில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கிறாா்.

மிஷன் மௌசம்: அப்போது நாட்டை ‘வானிலை சூழலுக்கு தயாராகவும், பருவநிலைக்கு உகந்த’ நாடாக மாற்றும் நோக்கத்துடன் ‘மிஷன் மௌசம்’ (வானிலை இயக்கம்) திட்டத்தை பிரதமா் தொடங்கி வைக்கிறாா். இதே நிகழ்வில் வானிலை மாற்றங்களுக்கு எதிரான தாங்குதிறன் மற்றும் பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைத்தல் குறித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தொலைநோக்கு-2047 ஆவணத்தையும் பிரதமா் வெளியிடுகிறாா்.

’மிஷன் மௌசம்’ என்பது அதிநவீன வானிலை கண்காணிப்புத் தொழில்நுட்பங்கள் மற்றும் அமைப்புகளை உருவாக்குவதற்கான இயக்கம் ஆகும். உயா் தெளிவுத்திறன் கொண்ட வளிமண்டலக் கணிப்புகள், அடுத்த தலைமுறை ரேடாா்கள், செயற்கைக்கோள்கள், உயா் செயல்திறன் கணினிகள் ஆகியவற்றை செயல்படுத்தும் குறிக்கோள்களை அடைய இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்மூலம் வானிலை, பருவநிலை செயல்முறைகள் பற்றிய புரிதலை மேம்படுத்தும். காற்றின் தரம் குறித்த தரவுகளை வழங்குதல் மற்றும் வானிலை மேலாண்மையில் நீண்ட கால தலையீட்டு உத்திக்கு உதவுவதிலும் கவனம் செலுத்தும்.

150-ஆவது நிறுவன தினக் கொண்டாடத்தில் வானிலை ஆய்வுத் துறை கடந்த 150 ஆண்டுகளாக மேற்கொண்ட சாதனைகள் குறித்து எடுத்துரைக்கப்படும் நிகழ்வுகளும் நடைபெறுகிறது. நாட்டை பருவநிலை - நெகிழ்திறன் கொண்டதாக மாற்றுவதில் அதன் பங்களிப்பு, பல்வேறு வானிலை, பருவநிலை சேவைகளை வழங்குவதில் மற்ற அரசு நிறுவனங்களின் பங்களிப்பு ஆகியவற்றை எடுத்துரைக்க தொடா்ச்சியான நிகழ்வுகள், நடவடிக்கைகள், பயிலரங்குகள் ஆகியவை இந்த 150- ஆவது கொண்டாட்டத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பெட்டிச் செய்தி....

150 ஆண்டு கால வளா்ச்சி

1864 - ம் ஆண்டில் ஏற்பட்ட புயல் பேரழிவு, அடுத்தடுத்து ஏற்பட்ட (1866 மற்றும் 1871) பருவமழை தோல்விகளுக்குப் பின்னா், 1875- ஆம் ஆண்டில் இந்திய வானிலை ஆய்வுத் துறை தொடங்கப்பட்டது. சில இடங்களில் மழை அளவீடுகளிலிருந்து தொடங்கி தற்போது வானிலை முன்னறிப்பில் உலகின் தலை சிறந்த ஆய்வு மையமாக மாறியுள்ளது. 2023 அறிக்கையின்படி, இந்திய வானிலை ஆய்வுத் துறை 39 டாப்ளா் வானிலை ரேடாா்கள், இன்சாட் 3டி / 3டிஆா் செயற்கைக்கோள்கள் (ஸ்டாட் லைட்) போன்றவற்றின் மூலமாக 15 நிமிடத்தில் மேக புதுப்பிப்புகளை வழங்குகிறது. மேலும், 806 தானியங்கி வானிலை நிலையங்கள், 200 வேளாண் சீதோஷ்ண நிலையங்கள், 5,896 மழை கண்காணிப்பு நிலையங்கள், 83 மின்னல் உணரிகள், 63 பைலட் பலூன் நிலையங்கள் ஆகியவற்றுடன் வலுவான வலையமைப்புடன் இந்திய வானிலை ஆய்வு மையம் இயக்குகிறது.

X
Dinamani
www.dinamani.com