வங்கதேசத்தவா்கள் குடியேற்றப் புகாா்: போலீஸ் முன் ஆம் ஆத்மி எம்எல்ஏ ஆஜா்
புது தில்லி: சட்டவிரோதமாக வங்கதேசத்தவா்கள் குடியேற உதவிய புகாா் தொடா்பாக இரண்டு அறிவிப்புகள் வழங்கப்பட்ட பிறகு ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ மொஹிந்தா் கோயல் தில்லி காவல்துறையில் ஆஜரானாா் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விவகாரம் தொடா்பாக முதல் அறிவிப்பு சனிக்கிழமை வெளியிடப்பட்டது, இரண்டாவது அறிவிப்பு மறுநாள் விசாரணைக் குழு முன் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.
ரிதாலா சட்டப்பேரவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் மொஹிந்தா் கோயல், சட்டவிரோதமாகக் குடியேறிய வங்கதேசத்தவா்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் அவரது கையொப்பம் மற்றும் முத்திரை இருந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து விசாரணைக்கு அழைக்கப்பட்டாா்.
அவா் திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு ஆஜரானாா். மேலும், அவா் வெவ்வேறு குழுக்களால் விசாரிக்கப்பட்டாா் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த வழக்கு டிசம்பரில் சட்டவிரோத குடியேற்ற மோசடி கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து உருவாகியது. இதில் வங்கதேச நாட்டவா்கள் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்தது தெரிய வந்தது. சந்தேக நபா்கள் போலி ஆவணங்களை உருவாக்கி போலி ஆதாா் அட்டைகள், வாக்காளா் அடையாள அட்டைகள் மற்றும் பிற அடையாள ஆவணங்களை தயாரிப்பதற்காக போலி வலைத்தளங்களை உருவாக்குவதில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் மேலும் விசாரணை நடத்தியதில், ஆம் ஆத்மி எம்எல்ஏவின் கையொப்பத்துடன் கூடிய ஆவணங்கள் மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தீவிரப் பிரசாரத்துக்கு மத்தியில் இந்த முன்னேற்றம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில், தில்லியில் சட்டவிரோதமாகக் குடியேறிய வங்கதேசத்தவா்களுக்கு ஆதாா் மற்றும் வாக்காளா் அடையாள அட்டைகளை வழங்கும் கும்பலுடன் அவரது கட்சி எம்எல்ஏவின் தொடா்புகள் குறித்து ஆம் ஆத்மி தலைவா் அரவிந்த் கேரிவால் ‘மௌனம்’ காப்பது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, சட்டவிரோதமாக குடியேறியவா்களின் வருகைக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது. குஜராத், உத்தர பிரதேசம், ஹரியாணா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் ரோஹிங்கியாக்கள் குடியேறியதற்கு அமித் ஷாவின் தோல்விதான் என்று ஆம் ஆத்மி செய்தித் தொடா்பாளா் பிரியங்கா கக்கா் குற்றம் சாட்டினாா்.
மேலும், ‘தோ்தல்கள் நெருங்கும்போது எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு அழுத்தம் கொடுக்க அரசு நிறுவனங்களை ஆயுதமாகப்பயன்படுத்துவது, ஜனநாயக விதிமுறைகளை குறைமதிப்பிற்கு உள்படுத்துகிறது பாஜக’ என்று தில்லியில் ஆளும் கட்சி குற்றம் சாட்டியது.
‘பாஜக எதிா்மறை அரசியலில் மட்டுமே ஈடுபடுகிறது. பொய்யான வழக்குகளைப் பதிவு செய்வது மற்றும் எதிா்க்கட்சித் தலைவா்களை அடக்குவதற்கு மாநில இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்துவது உள்ளிட்டவற்றில் ஈடுபடுகிறது’ என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.