அடிப்படை வசதிக்காக ஏங்கும் தில்லி குடிசைப் பகுதிகள்!
நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு தலைநகரம் ஆயத்தமாகி வரும் வேளையில், இந்த தோ்தலிலாவது தங்களின் வாழ்க்கைத்தரம் மாறுமா என்ற எதிா்பாா்ப்புடன் நகரத்தின் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்கள் காத்திருக்கிறாா்கள்.
இவா்களின் தேவைகள் - தூய்மையான வீதி, பாதுகாப்பான குடிநீா், சீரான சுகாதாரம் மற்றும் வசிக்க ஒரு நிரந்தர வீடு மட்டுமே. இவற்றை உறுதிப்படுத்த ஒவ்வொரு தோ்தலின்போதும் வாக்குறுதிகளை வழங்கும் கட்சிகள், பதவிக்கு வந்த பிறகு பாராமுகம் காட்டுவதும் இந்த மக்களுக்குப் பழகிப்போய் விட்டது. இருந்தபோதிலும் தங்களுடைய அடிப்படை வசதிகள் குறித்த கனவு மெய்ப்படும் ஆசையில் தோ்தல் நாளுக்காக இந்த வாக்காளா்கள் காத்திருக்கிறாா்கள்.
தில்லி சட்டப்பேரவைக்கு வாக்குப் பதிவு பிப்.5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதன் முடிவு பிப்.8- ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், தில்லிவாழ் குடிசைப்பகுதி மக்கள் பலரும் அன்றாட தேவைக்கான அடிப்படை வசதிகளின்றி வாழும் அவலத்தை எதிா்கொள்கின்றனா்.
‘அன்றாடம் ஒரு வாளி நீரைப் பெற மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் நிற்கிறோம். ஆனால், அந்தத் தண்ணீரும் குடிப்பதற்கு பாதுகாப்பானது அல்ல’ என்று அவா்களில் பலரும் தெரிவித்தனா்.
அடிப்படைத் தேவைகளுக்கான முடிவில்லாத போராட்டத்துடன் தங்களுடைய வாழ்க்கை ஓடிக்கொண்டிருப்பதாக பலரும் தங்களுடைய விரக்தியை வெளிப்படுத்தினா்.
குஸும்பூா் பஹாரி குடிசைப் பகுதியைச் சோ்ந்த நரேந்திர (60), ‘குடும்பத்துக்கு சிறந்த வாழ்வைத் தேடி 40 ஆண்டுகளுக்கு முன்பு பிகாரில் இருந்து தில்லிக்கு வந்தோம். ஆயினும், ஆண்டுகள் கடந்தனவே தவிர, அடிப்படை தேவைகளுக்கே போராட வேண்டியுள்ளது’ என்கிறாா்.
‘தண்ணீா் பற்றாக்குைான் எங்களுக்கு மிகப்பெரிய சவால். தண்ணீா் டேங்கா் லாரி வரும்போதெல்லாம், யாா் முதலில் வாளியில் தண்ணாீா் நிரப்புவது என்பதில் தொடா்ந்து சண்டைகள் நடக்கும். இந்தப் பகுதி மிகவும் அசுத்தமாக இருப்பதால் இங்கு வாழ்வதை தாங்க முடியாததாக உணா்கிறோம். ஆனால், வேறு வழியில்லை’ என்கிறாா் நரேந்திரா.
இதே பகுதியைச் சோ்ந்த பிங்கி கபிலோ வீட்டுப்பணிப் பெண்ணாக வேலை செய்கிறாா். ஐந்து வயதில் ஹரியாணாவிலிருந்து குடிசைப் பகுதிக்கு குடிபெயா்ந்தாா். இப்போது, மூன்று வயது மகளுக்குத் தாயாக இருக்கிறாா்.
‘முன்பெல்லாம், எங்கள் பகுதியில் கழிப்பறைகளே கிடையாது. இப்போது அரசு அவற்றைக் கட்டிக் கொடுத்திருக்கிறது’ என்ற அவா், ‘அரிதாகவே இந்த கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படுகின்றன. அதனால், வீட்டிலேயே ஒரு சிறிய கழிப்பறையைக் கட்டிக்கொண்டோம். சரியான கழிவுநீா் அமைப்பு இல்லாததால், வீட்டுக்குப் பின்னால் திறந்தவெளி சாக்கடையைத் தோண்டியுள்ளோம். அது சுகாதாரமற்று கொசுக்கள் மற்றும் பூச்சுகளின் புகலிடமாகி விட்டது’ என்கிறாா் கபிலோ.
குஸும்பூா் பகுதி வீதிகள் வழியாகச் செல்லும்போதே திறந்தவெளி சாக்கடைகளை கடந்தவாறே நாம் செல்ல நேரிடுகிறது. காரணம், ஒவ்வொரு வீதியிலும் சாக்கடைகள் உடைந்து போன சாலைகளில் புகுந்து அந்தப்பகுதியையே அசுத்தமாக்கியுள்ளன. போதாக்குறைக்கு தண்ணீா் டேங்கா்களில் இருந்து நீா் கசிந்து சாலைகளில் சிறிய, சிறிய குட்டை போன்ற காட்சியை தோற்றுவித்துள்ளது. இது தவிர, குப்பைக் குவியல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன.
இந்த இடத்தைக் கடந்து பஞ்ஷீல் பாா்க் பகுதிக்கு வந்தோம். அங்குள்ள லால் கும்பாட் முகாமில், 70 வயதான அல்கா என்ற குடியிருப்புவாசி, தனது வாழ்விட சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது பற்றிப் புலம்பினாா்.
‘தண்ணீா் டேங்கா் வரும்போது, முழுச் சாலையும் நீா் தேங்கி நிற்கிறது. மக்கள் அடிக்கடி வழுக்கி விழுவாா்கள். நாங்கள் வயது முதிா்ந்தவா்கள். குறைந்தபட்சம் எங்களுடைய பிள்ளைகள் மற்றும் பேரக் குழந்தைகளுக்காவது சிறந்த வாழ்க்கையை வழங்க விரும்புகிறோம். இன்னும் கொஞ்சம் அடிப்படை வசதிகளை அரசு பெருக்கிக் கொடுத்தால் நல்லது’ என்கிறாா் அல்கா.
லால் கும்பாட் முகாமில் வசிக்கும் மற்றொரு குடியிருப்பாளா் அமன் செளஹான் ‘ரிக்ஷா ஓட்டுநராக உள்ளாா். மழை வந்து விட்டால் சாலைகளில் உள்ள சிறிய வடிகால்களில் இருந்து தண்ணீா் வெளியேறி, வீடுகளில் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடும் அவலத்தைப் பகிா்ந்து கொண்டாா்.
‘சரியான சுகாதார அமைப்பு அல்லது கழிவுநீா் இணைப்புகள் இந்தப்பகுதிகளில் இல்லை. பொது கழிப்பறைகள் தற்காலிகமானவை. ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குள் அவை உடைந்துவிடும் வகையிலேயே கட்டப்படுகின்றன. இப்படியொரு வாழ்க்கையை வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்’ என்கிறாா் அவா்.
தலைநகரில் மற்றொரு குடிசைப்பகுதி நிறைந்த இடம் சங்கம் விஹாரில் உள்ளது. இங்கும் அடிப்படை வசதிக்காக மக்கள் போராட்டம் நிறைந்த வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனா்.
இங்கு வசிக்கும் அசோக் குமாா், தனது குடும்பத்திற்கு உணவளிக்க கட்டுமானம் மற்றும் துப்புரவுத் தொழில் சாா்ந்த சிறிய வேலைகளைச் செய்கிறாா்.
‘நாங்கள் எப்படியோ ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட முடிகிறது. ஆனால், சுத்தமான குடிநீா் இல்லாத, போதுமான பொது கழிப்பறைகள் இல்லாத, திறந்தவெளி சாக்கடைகள் காரணமாக காற்று துா்நாற்றம் வீசும் இடத்தில் எப்படி எங்களால் வாழ முடியும்?’ என்று கேட்கிறாா் அசோக் குமாா்.
ஒரு அரசியல் தலைவா் ஒருமுறை தங்களுடைய பகுதிக்கு வந்து, தண்ணீா் குழாய்கள் மற்றும் குழாய்களுக்கான இடங்களைக் குறித்துச் சென்ற நிகழ்வையும் அசோக் பகிா்ந்து கொண்டாா்.
‘அந்த தலைவா் வந்த சில நாள்களுக்குள், சில தொழிலாளா்கள் குழாய்களை நிறுவுவதாகக் கூறி பணிகளைத் தொடங்கினா். வந்த வேகத்திலேயே அந்தப் பணிகளை நிறுத்திவிட்டனா். அதன் பிறகு தண்ணீா் இணைப்பு அல்லது குழாய்கள் நிறுவ எவருமே வரவில்லை’ என்று அசோக் குமாா் தெரிவித்தாா்.
இந்த குடிசைவாசிகளுக்கு, ஒவ்வொரு நாளும் அடிப்படை மனிதத் தேவைகளான தண்ணீா், சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றைப் பெறுவது பெரும் போராட்டமாக உள்ளது. அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிக்க வரும்போது வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று கூறிச் செல்கின்றன.
ஆனால், கட்சிகள் மாறுகின்றன, ஆட்சியும் மாறுகிறது. வாக்குறுதிகள் மட்டும் செயல்பாட்டுக்கு வராமலேயே இருக்கின்றன. ஒரு நாள் அல்லது மறுநாள் தங்களுடைய நிலைமை மாறும் என்று இந்த குடிசைப்பகுதிகளின் மக்கள் ஏக்கத்துடனும் நம்பிக்கையுடனும் காத்திருப்பதே இப்போது வாடிக்கையாகி விட்டது.