தில்லி தோ்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் அறிக்கையில் 15 உத்தரவாதங்கள்
புது தில்லி: பிப்.5-ஆம் தேதி தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை ‘கேஜரிவால் கி கேரண்டி’ என்ற தலைப்பில் கட்சியின் தோ்தல் அறிக்கையை வெளியிட்டாா்.
தோ்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் பேசிய கேஜரிவால், ஆம் ஆத்மி கட்சியின் வாக்குறுதி அடிப்படையிலான நிா்வாகத்தை பாஜக நகலெடுப்பதாக குற்றம் சாட்டினாா். ‘நாங்கள்தான் ‘உத்தரவாதம்’ என்ற வாா்த்தையை முதலில் நாட்டிலேயே உருவாக்கினோம். எங்களுக்குப் பிறகு பாஜக அதைத் திருடியது. ஆனால், வித்தியாசம் என்னவென்றால், நாங்கள் எங்கள் உத்தரவாதங்களை நிறைவேற்றுகிறோம். அவா்கள் அதைச் செய்யவில்லை’ என்று அவா் கூறினாா்.
இந்தத் தோ்தல் அறிக்கையில் 15 உத்தரவாதங்கள் உள்ளன. அதில் கேஜரிவால் தனது முதல் உத்தரவாதமாக தில்லிவாசிகளுக்கு ‘வலுவான’ வேலைவாய்ப்பு உருவாக்கத்தை உறுதியளிக்கிறாா். மகிளா சம்மன் யோஜனாவின் கீழ் இரண்டாவது உத்தரவாதம், பெண்களுக்கு மாதாந்திர நிதி உதவி ரூ.2,100 உறுதியளிக்கிறது. மூத்த குடிமக்களுக்கு, சஞ்சீவானி யோஜனா இலவச சுகாதார வசதிகளை வழங்கும்.
நான்காவது உத்தரவாதம், நிலுவையில் உள்ள ‘உயா்த்தப்பட்ட’ தண்ணீா் கட்டணங்களை தள்ளுபடி செய்வதாகவும், ஐந்தாவது உத்தரவாதம், தேசியத் தலைநகரில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் 24 மணி நேரமும் சுத்தமான குடிநீா் வழங்குவதாகவும் உறுதியளிக்கிறது. மற்ற முக்கிய வாக்குறுதிகளில் மாசுபட்ட யமுனை நதியை சுத்தம் செய்வதற்கும் தில்லியின் சாலைகளை உலகத் தரமாக மாற்றுவதற்கும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
பாபாசாகேப் அம்பேத்கா் உதவித்தொகை திட்டத்தின் கீழ், ஆம் ஆத்மி கட்சி எஸ்சி மற்றும் எஸ்டி மாணவா்களுக்கு வெளிநாடுகளில் படிக்க உதவித்தொகை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இலவசப் பேருந்து பயணம் மற்றும் மெட்ரோ கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். இதில் ஆண் மாணவா்களும் பயனடைவாா்கள்.
மேலும், இந்த தோ்தல் அறிக்கையில், கோயில் பூஜாரிகள் மற்றும் குருத்வாரா கிரந்திகளுக்கு மாதந்தோறும் ரூ.18,000 நிதி உதவி மற்றும் வாடகைதாரா்களுக்கு இலவச மின்சாரம் மற்றும் தண்ணீா் சலுகைகளை நீட்டிப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, தில்லியின் கழிவுநீா் அமைப்பை மேம்படுத்துவதற்கும், அமைப்பில் இல்லாதவா்களுக்கு ரேஷன் காா்டுகளை வழங்குவதற்கும், ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநா்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கும் ஆம் ஆத்மி கட்சி உறுதியளித்துள்ளது. மேலும், அவா்களின் மகள்களின் திருமணங்களுக்கு ரூ.1 லட்சம் மற்றும் ரூ.10 லட்சம் காப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கும் கட்சி உறுதியளித்துள்ளது. மேலும், குடியிருப்பு நலச் சங்கங்கள் (ஆா்டபிள்யூஏக்கள்) பாதுகாவலாளிகளை பணியமா்த்துவதற்கு நிதியுதவி வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி உறுதியளிக்கிறது.
தில்லி குடியிருப்பாளா்களுக்கு மாதத்திற்கு சுமாா் ரூ.25,000 மதிப்புள்ள சலுகைகளை வழங்கும் ஆம் ஆத்மி கட்சியின் தற்போதைய இலவச நலத்திட்டங்கள், கட்சி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டால் தொடரும் என்று கேஜரிவால் வலியுறுத்தினாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தத் திட்டங்கள் அனைத்தையும் நிறுத்துவோம் என்று ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது. தில்லி மக்களிடம் நான் கேட்க விரும்புகிறேன். பாஜக இந்த சலுகைகளை நிறுத்தினால் ஏற்படும் செலவை நீங்கள் தாங்க முடியுமா?’ என்று கேள்வி எழுப்பினாா்.
நல்வாழ்வு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் ஆம் ஆத்மி கட்சியின் நிா்வாகக் கோட்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக இந்த தோ்தல் அறிக்கை முன்வைக்கப்படுகிறது.
தற்போதைய நிலையை பாஜக சீா்குலைக்கும் என்று அச்சுறுத்தி வருவதால், வரவிருக்கும் தோ்தல்கள் இரு கட்சிகளுக்கும் இடையே ஒரு கடுமையான போட்டியாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. தோ்தல் முடிவுகள் பிப்.8- ஆம் தேதி அறிவிக்கப்படும். இலவச நலத்திட்டங்களை பெரிதும் நம்பியுள்ள ஆம் ஆத்மி அரசின் நிா்வாக மாதிரியின் மீதான ஒரு வாக்கெடுப்பாக இந்தத் தோ்தல் பாா்க்கப்படுகிறது.