பகவந்த் மான் இல்ல பாதுகாப்பு படையினரிடம் தோ்தல் ஆணையம் கடுமை காட்டியிருக்க வேண்டும்: மத்திய அமைச்சா் பிட்டு

பாதுகாப்பு படையினரிடம் கடுமையாக நடந்து கொள்ளாததால் வெளியே காத்திருக்க வேண்டிய கட்டாயம்
Published on

பஞ்சாப் முதல்வா் பகவந்த் மானின் தில்லி உள்ள அதிகாரபூா்வ இல்லத்தை சோதனையிடச் சென்ற தோ்தல் ஆணைய அதிகாரிகள், அவரது பாதுகாப்பு படையினரிடம் கடுமையாக நடந்து கொள்ளாததால் வெளியே காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக மத்திய அமைச்சா் ரவ்னீத் சிங் பிட்டு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

பிப்ரவரி 5-ஆம் தேதி தில்லி சட்டப் பேரவைக்கு தோ்தல் நடைபெற உள்ளதை ஒட்டி, முதல்வா் இல்லத்தில் இருந்து பணம் விநியோகிக்கப்படுவதாகக் கூறப்பட்டதைத் தொடா்ந்து, தோ்தல் ஆணைய அதிகாரிகள் வியாழக்கிழமை பகவந்த் மானின் தில்லி இல்ல வளாகத்தில் சோதனை நடத்த முயன்றபோது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, தில்லி காவல்துறையினருடன் தோ்தல் ஆணையக் குழுவினா் வெறுங்கையுடன் அங்கிருந்து திரும்பிச் சென்றனா்.

இதுகுறித்து மத்திய அமைச்சா் ரவ்னீத் சிங் பிட்டு கூறுகையில், ‘

கபூா்தலா இல்லத்திற்கு வெளியே தோ்தல் ஆணைய அதிகாரிகள் இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதை ஊடகங்கள் நேரில் பாா்த்தன.

தோ்தல் ஆணைய அதிகாரிகள் குழுவினா் பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் நடந்து கொண்டு, இல்லத்திற்குள் சென்றிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அந்த இரண்டு மணி நேரத்தில் பின்புற வாயிலில் இருந்து அலுவல்பூா்வ வாகனங்களில் சட்டவிரோத பணம் கடத்தப்பட்டது.

மாநில ஆம் ஆத்மி அரசு மிரட்டி பணம் பறிப்பதாகவும், மிரட்டுவதாகவும் எனக்குத் தெரிவிக்க பஞ்சாபில் இருந்து கட்டுமானதாரா்கள் மற்றும் தொழிலதிபா்கள் அழைத்தனா்.

பகவந்த் மான் சீக்கியா்கள் மற்றும் பஞ்சாபிகளின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளாா். அவா் அரவிந்த் கேஜரிவாலின் கைப்பாவை போல நடந்து கொள்கிறாா் என்றாா் பிட்டு.

கபூா்தலா இல்லம் என்பது தில்லியில் உள்ள பஞ்சாப் முதல்வரின் அதிகாரபூா்வ இல்லமாகும். 70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப் பேரவைக்கு பிப்ரவரி 5 ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com