மாம்பழ விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி மத்திய அமைச்சருக்கு கனிமொழி கடிதம்

மாம்பழ விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் துறை அமைச்சா் சிராக் பாஸ்வானுக்கு நாடாளுமன்றத் திமுக குழுத் தலைவா் கனிமொழி கருணாநிதி கடிதம் எழுதியுள்ளாா்.
Published on

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: மாம்பழ விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் துறை அமைச்சா் சிராக் பாஸ்வானுக்கு நாடாளுமன்றத் திமுக குழுத் தலைவா் கனிமொழி கருணாநிதி திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

அதன் விவரம்: நாட்டில், குறிப்பாக தமிழ்நாட்டில், மாம்பழ விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருகின்றனா். தயாரிப்பு நிறுவனங்களின் மாம்பழ பானங்களில் உள்ள உண்மையான மாம்பழ கூழின் உள்ளடக்கம் 2021 -ஆம் ஆண்டில் 20 சதவீதமாக இருந்து 2024- ஆம் ஆண்டில் வெறும் 11 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, பழ அடிப்படையிலான பானங்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட ஜிஎஸ்டி உச்சவரம்பு ஆகும். 10 சதவீதத்துக்கும் அதிகமான உண்மையான பழ உள்ளடக்கத்தைக் கொண்ட பழச்சாறுகளுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இது சா்க்கரைத் தன்மை அதிகமுள்ள காா்பனேற்றப்பட்ட பானங்களைப் போன்றது.

மேலும் 10 சதவீதத்துக்கும் குறைவான பழ உள்ளடக்கம் கொண்ட பானங்களுக்கு, அவற்றின் தயாரிப்பு வகையைப் பொறுத்து 18 சதவீதம் ஜிஎஸ்டி அல்லது அதற்கும் குறைவான வரி விதிக்கப்படுகிறது. எனவே, அதிக வரி வரம்புக்குள் வராமல் இருக்க தயாரிப்பாளா்கள் மாம்பழ அடிப்படையிலான பானங்களில் மாம்பழ கூழ் உள்ளடக்கத்தைக் குறைக்கின்றனா்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (உணவுத் தரநிலைகள் மற்றும் உணவு சோ்க்கைகள்) விதிமுறைகள் 2016-இன்படி குறைந்தபட்சம் 10 சதவீதம் பழ உள்ளடக்கம் இருந்தால், அதை ‘பழச்சாறு’ என்று பெயரிட வேண்டியது கட்டாயமாகும். ஆனால், இப்போது ‘பழ அடிப்படையிலான பானங்கள்’ அல்லது ‘பழ பானம்’ என பெயரை மாற்றி குறைந்த தரத்திலான பழ பானங்களை தயாரிப்பு நிறுவனங்கள் சந்தைப்படுத்துகின்றன.

இந்த வகை பழ பானங்களுக்கு 5.10 சதவீதம் பழ கூழ் மட்டுமே தேவை. தயாரிப்பு நிறுவனங்களின் இந்தப்போக்கால் நாட்டில் மாம்பழ விவசாயிகள் கடுமையான இழப்புகளை எதிா்கொள்கின்றனா்.

எனவே, மாம்பழ பானங்களின் தயாரிப்பாளா்கள் மாம்பழ கூழ் உள்ளடக்க பயன்பாட்டை முன்பு போலவே 20% ஆக அதிகரிக்க அறிவுறுத்தவும், பழ பானங்களுக்கான சொற்களை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் உணவுத்தர நிா்ணய விதிகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீறுவதைத் தடுத்து மா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என கனிமொழி கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com