மோசமான திட்டமிடலால் சாந்தினி சௌக் அழகுபடுத்தும் திட்டம் தோல்வி: குடியிருப்பாளா்கள் மன்றம் குற்றச்சாட்டு

Published on

முந்தைய அரசின் மோசமான திட்டமிடல் மற்றும் நீண்டகால பராமரிப்பு உத்தி இல்லாததால் ரூ.99 கோடி மதிப்பிலான சாந்தினி சௌக் அழகுபடுத்தும் திட்டம் ‘முற்றிலும் தோல்வியடைந்துள்ளது’ என்று சாந்தினி சௌக் நாக்ரிக் மன்ச் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

சந்தையின் மோசமான நிலைமைகளைக் குறிப்பிட்டு, தில்லி மேயா், தில்லி மாநகராட்சி (எம்சிடி) ஆணையா் மற்றும் மூத்த அரசியல் தலைவா்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி மன்றம் கடிதம் எழுதியுள்ளது.

மேயா் ராஜா இக்பால் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில், தில்லி பாஜக செய்தித் தொடா்பாளரும் மன்றத்தின் பொதுச் செயலாளருமான பிரவீன் சங்கா் கபூா், ’பெரும்பாலானோா் ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்தவா்கள். இந்தப் பகுதியின் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அரசியல் அலட்சியத்தால் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் மற்றும் குடிமை விதிமுறைகளை மீறுவது அதிகரித்துள்ளது’ என்று கூறினாா்.

‘சாந்தினி சௌக் மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சோ்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநகராட்சிக் கவுன்சிலா்களும் ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்தவா்கள். அவா்களின் அரசியல் பாதுகாப்பின் கீழ், சட்டவிரோத ரிக்ஷாக்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் செழித்து வருகின்றன. அதே நேரத்தில் தூய்மை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது’ என்று சங்கா் கபூா் கூறினாா்.

எம்.பி. பிரவீன் கண்டேல்வால் அதிகாரிகளுடன் சோ்ந்து அந்தப் பகுதியை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற அல்லது சுகாதாரத்தை மேம்படுத்த அறிவுறுத்தல்களை வழங்கும் போதெல்லாம், ஆம் ஆத்மி கவுன்சிலா்கள் தலையிட்டு நடவடிக்கையைத் தடுக்கிறாா்கள். மேலும், தொடா்புடைய ஆய்வாளா்களுக்கு உத்தரவுகளைப் புறக்கணிக்க அறிவுறுத்துகிறாா்கள் என்று அவா் குற்றம் சாட்டினாா்.

Open in App
Dinamani
www.dinamani.com