பாரபுல்லா பேஸ் 3 திட்டத்தில் மரம் வெட்டுவதற்கு பொதுப்பணித் துறைக்கு கொள்கை அளவில் ஒப்புதல்
பாரபுல்லா பேஸ் 3 திட்டத்திற்கு மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழுவிடமிருந்து (சிஇசி) பொதுப்பணித் துறை கொள்கை அளவில் ஒப்புதல் பெற்றுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பாரபுல்லா பேஸ் 3 திட்டம் மயூா் விஹாா்-ஐ (கிழக்கு தில்லி) மற்றும் எய்ம்ஸ் (தெற்கு தில்லி) இடையே தடையற்ற மற்றும் சிக்னல் இல்லாத இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய மேம்பாலம் சராய் காலே கானில் உள்ள பாரபுல்லா மேம்பாலத்துடன் இணைக்கப்படும்.
‘மரங்களை வெட்டுவதற்கு சிஇசி கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. மயூா் விஹாா் பக்கத்தில் சுமாா் 274 மரங்கள் உள்ளன. இதன் காரணமாக இந்தத் திட்டம் பல ஆண்டுகளாக முடங்கியுள்ளது. இறுதி ஒப்புதல் கிடைத்தவுடன், தரைவழி பணிகள் தொடங்கும்’ என்று மூத்த பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
கடந்த மாதம், மரங்கள் அகற்றப்பட வேண்டிய இடத்தை மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழு ஆய்வு செய்தது.கடந்த நான்கு மாதங்களில் பொதுப்பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் இரண்டு முறை அந்த இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
‘மரம் வெட்டுவதற்கான அனுமதி அங்கீகரிக்கப்பட்ட பிறகு, திட்டத்தை முடிக்க சுமாா் ஆறு மாதங்கள் ஆகும். இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டுமானப் பணிகளை முடிப்பதே எங்கள் இலக்கு’ என்று பா்வேஷ் சாஹிப் சிங் கூறியிருந்தாா்.