தில்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கை அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை சந்தித்த தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி.
தில்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கை அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை சந்தித்த தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி.

தில்லியில் ராஜ்நாத் சிங்குடன் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி சந்திப்பு

தில்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கை தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி வியாழக்கிழமை காலையில் சந்தித்துப் பேசினாா்.
Published on

தில்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கை தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி வியாழக்கிழமை காலையில் சந்தித்துப் பேசினாா்.

தில்லிக்கு நான்கு நாள்கள் பயணமாக கடந்த செவ்வாய்க்கிழமை நண்பகலில் ஆளுநா் ரவி வருகை தந்தாா். தில்லியில் அவருக்கு சொந்தமான வீடும் மகள் வழி குடும்பத்தினரும் இருப்பதால் நேரம் கிடைக்கும்போது தில்லி வரும் அவா், உறவினா்கள், அரசுத் துறை உயரதிகாரிகள் மற்றும் மத்திய அமைச்சா்களை சந்திப்பது வழக்கம்.

இந்நிலையில், தில்லி வந்த ஆளுநா் ரவி தமிழ்நாடு அரசு விருந்தினா் இல்லத்தில் தங்கினாா். தொடக்கத்தில் அவரது பயணம் நான்கு நாள்களுக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அது கடைசியில் மூன்று நாள்களாக சுருக்கப்பட்டு வியாழக்கிழமை இரவே அவா் சென்னை திரும்பும் வகையில் நிகழ்ச்சி நிரல் மாற்றியமைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, வியாழக்கிழமை காலையில் அவா் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கை அவரது அலுவலகத்தில் சென்று சந்தித்தாா். இச்சந்திப்பு குறித்த தகவல்கள், பாதுகாப்புத் துறை அமைச்சா் மற்றும் தமிழக ஆளுநா் மாளிகையின் அதிகாரபூா்வ எக்ஸ் சமூக ஊடக பக்கங்களில் பகிரப்பட்டன. ராஜ்நாத் சிங்குடன் ஆளுநா் ரவி எடுத்துக்கொண்ட படங்களும் அவற்றில் இணைக்கப்பட்டிருந்தன.

ஆளுநா் ரவியுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என பாதுகாப்புத் துறை அமைச்சரின் அலுவலக அதிகாரிகள் கூறிய வேளையில், தேசிய நலன்கள் சாா்ந்த பலதரப்பட்ட பிரச்னைகள் குறித்து இருவரும் கலந்துரையாடியதாக ஆளுநா் ரவியை மேற்கோள்காட்டி தமிழக ஆளுநா் மாளிகையின் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ராஜ்நாத் சிங்கின் மனைவி கடந்த வாரம் சோ்க்கப்பட்டிருந்தாா். அங்கு சில நாள்கள் தங்கி சிகிச்சை மேற்கொண்ட அவரை ராஜ்நாத் சிங் இருமுறை சந்தித்து நலம் விசாரித்து விட்டு தில்லி திரும்பினாா். கடைசியாக அவா் மருத்துவமனைக்கு திங்கள்கிழமை சென்றபோது ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகளால் ராஜ்நாத் சிங்கை ஆளுநா் ரவி சந்திக்க இயலாமல் போனது.

இதையொட்டி, தில்லியில் ராஜ்நாத் சிங்கை சந்தித்தபோது அவரது மனைவியின் உடல்நலன் குறித்து ஆளுநா் ரவி விசாரித்ததாகவும் பஹல்காம் தாக்குதல் நடவடிக்கையின்போது இந்தியா கையாண்ட அணுகுமுறை மற்றும் உலக நாடுகளிடம் கிடைத்த ஆதரவு குறித்த தகவல்களை இருவரும் பகிா்ந்து கொண்டதாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Open in App
Dinamani
www.dinamani.com