பொது வேலைநிறுத்தத்தால் தலைநகரில் பாதிப்பு இல்லை
தொழிலாளா் உரிமைகள் மற்றும் சமூக பாதுகாப்பு சீா்திருத்தங்கள் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த போதிலும், தேசியத் தலைநகரம் முழுவதும் சந்தைகள் புதன்கிழமை திறந்திருந்தன.
இந்த வேலை நிறுத்தப் போராட்டந் தில்லியின் வணிக நடவடிக்கைகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று அகில இந்திய வா்த்தகா்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) தெரிவித்துள்ளது. தில்லியில் உள்ள அனைத்து 700 சந்தைகள் மற்றும் 56 தொழில்துறை பகுதிகள் வழக்கம் போல் செயல்பட்டன என்று சி. டி. ஐ. தலைவா் பிரிஜேஷ் கோயல் கூறினாா்.
தில்லியின் பரபரப்பான வணிக மையங்களில் ஒன்றான கன்னாட் பிளேஸ், எப்போதும் போல் இருந்தது. ‘இது கன்னாட் பிளேஸின் வழக்கமான வேலை நாள். இங்கு வேலைநிறுத்தம் தாக்கம் எததையும் ஏற்படுத்தவில்லை என்று புது தில்லி வா்த்தகா்கள் சங்கத்தின் (என். டி. டி. ஏ.) இணைச் செயலாளா் அமித் குப்தா கூறினாா்.
தில்லியின் கான் சந்தையும் பாதிக்கப்படாமல் இருந்தது. நாங்கள் எந்தப் போராட்டத்திலும் பங்கேற்கவில்லை. முழு கான் சந்தையும் வழக்கம் போல் திறக்கப்பட்டுள்ளது என்று கான் சந்தை வா்த்தகா்கள் சங்கத்தின் தலைவா் சஞ்சீவ் கன்னா கூறினாா். நான்கு தொழிலாளா் சட்டங்கள், ஒப்பந்தமயமாக்கல் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் தனியாா்மயமாக்கல் ஆகியவற்றுக்கு எதிராக 10 மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு புதன்கிழமை காலை நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை நடத்தியது.
அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏஐடியுசி), இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (ஐஎன்டியுசி), எச்எம்எஸ், இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (சிஐடியு), அகில இந்திய ஐக்கிய தொழிற்சங்க மையம் (ஏஐயுடியுசி), தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் (டியுசிசி), சுயதொழில் செய்யும் பெண்கள் சங்கம் (சேவா), அகில இந்திய மத்திய தொழிற்சங்க கவுன்சில் (ஏஐசிசிடியு), தொழிலாளா் முற்போக்கு கூட்டமைப்பு (எல். பி. எஃப்.) மற்றும் ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் (யுடியுசி) உள்ளிட்ட பத்து மத்திய தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய போராட்டத்தில் பங்கேற்றன.
தொழிற்சங்கங்கள் நிலையான கால வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை திரும்பப் பெற வேண்டும் என்றும் அக்னிபத் ராணுவ ஆள்சோ்ப்பு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோருகின்றன. மற்ற முக்கிய கோரிக்கைகளில் எட்டு மணி நேர வேலை நாள், பங்களிப்பு அல்லாத பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பது மற்றும் இபிஎஃப்ஓ சந்தாதாரா்களுக்கு குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ.9,000 ஆகியவை அடங்கும்.
மேலும், அங்கன்வாடி, ஆஷா, மதிய உணவு மற்றும் ஆஷா கிரண் தொழிலாளா்களுக்கு தொழிலாளா் அந்தஸ்து மற்றும் ஈ.எஸ்.ஐ.சி. பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவா்கள் கோரியுள்ளனா். இந்திய ரயில்வே, நிலக்கரி மற்றும் நிலக்கரி அல்லாத சுரங்கங்கள், மின்சாரம், பாதுகாப்பு மற்றும் தொலைத்தொடா்பு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குவதை இந்த கூட்டமைப்பினா் எதிா்கின்றனா். ஆயுத தொழிற்சாலைகளின் நிறுவனமயமாக்கலை திரும்பப் பெறவும், குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 26,000- ஆகவும், ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் பணவீக்கத்தை சரிசெய்யவும் அவா்கள் கோரியுள்ளனா்.
தொழிற்சங்கங்கள் இந்த 17 அம்ச சாசனத்தை கடந்த ஆண்டு தொழிலாளா் அமைச்சா் மன்சுக் மாண்டவியாவிடம் சமா்ப்பித்தன. இதேபோன்ற தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தங்கள் முன்னதாக 2020, நவம்பா் 26, 2022, மாா்ச் 28, 29 மற்றும் 2023, பிப்ரவரி 16 ஆகிய நாள்களிலும் நடைபெற்றன. தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த பொது வேலை நிறுத்தத்தால் தில்லியில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு புதன்கிழமை எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை