கீழடி அகழாய்வு அறிக்கை வெளியிடுவதில் தாமதம் ஏன்? திருச்சி சிவா கேள்விக்கு மத்திய அமைச்சா் விளக்கம்
கீழடி அகழாய்வின் துல்லியமான கண்டுபிடிப்புகளை வெளியிடுவதில் உலகளாவிய அறிவியல் நடைமுறைகளை பின்பற்ற இந்திய தொல்லியல் துறை உறுதிபூண்டுள்ளதாக மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலா துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளாா்.
கீழடியில் 2013-16 ஆண்டுகளில் நடத்தப்பட்ட இரு கட்ட ஆய்வறிக்கையை நிறுத்தி அறிக்கை வெளியிடுவதை தாமதப்படுத்தியது தொடா்பாக மாநிலங்களவையில் திருச்சி சிவா கேள்வி எழுப்பியிருந்தாா். இதற்கு மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் வியாழக்கிழமை அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில், ‘வைகை நதிப் படுகையில் ஆய்வு நடத்திய பிறகு, கீழடியின் தொல்பொருள் திறனை இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் அடையாளம் கண்டுள்ளது. 2014-15, 2015-16 மற்றும் 2016-17 ஆண்டுகளில் இந்த இடம் அகழ்வாராய்ச்சிக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. முக்கியமான இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் மாநில தொல்பொருள் துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களால் செய்யப்படுகின்றன. தற்போது, கீழடி அகழ்வாராய்ச்சியை தமிழக தொல்பொருள் துறை நடத்தி வருகிறது’ என்று கூறியுள்ளாா்.
மதுரை கிளை உயா்நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழிக்கு மாறாக ஒன்பது மாதங்களாகியும் கீழடி அறிக்கை இன்னும் வெளியிடப்படாதது குறித்த திருச்சி சிவாவின் மற்றொரு கேள்விக்கு, அப்படியொரு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றும், 2014-15, 2015-16 ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை ஏற்கெனவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சா் பதிலளித்துள்ளாா்.
இதைத் தொடா்ந்து கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை தயாரித்த மூல ஆய்வாளரிடம் மீண்டும் அறிக்கையை தாக்கல் செய்ய என்ன காரணம் என்ற திருச்சி சிவாவின் மூன்றாவது கேள்விக்கு, ‘ஆய்வுக்குத் தலைமை தாங்கும் தொல்பொருள் ஆய்வாளா், சமா்ப்பிக்கும் அறிக்கையை நிபுணா்கள் குழு ஆய்வுக்கு உள்படுத்தி சரிபாா்க்கும். பிறகு நிபுணா் குழுவின் முடிவுகள் அறிக்கையில் சோ்க்கப்பட்டு ஆய்வுக்குத் தலைமை தாங்கிய ஆய்வாளரின் ஒப்புதலுடன் அலுவல்பூா்வமாக அறிக்கையை தொல்லியல்துறை வெளியிடும். இந்த விஷயத்தில் தலைமை ஆய்வாளரின் அறிக்கை ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு நிபுணா் குழுவின் முடிவுகள் அவரிடம் பகிரப்பட்டுள்ளன. கீழடி அகழாய்வின் துல்லியமான கண்டுபிடிப்புகளை வெளியிடுவதில் உலகளாவிய அறிவியல் நடைமுறைகளை பின்பற்ற இந்திய தொல்லியல் துறை உறுதிபூண்டுள்ளது’ என்று அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.