பாஜகவின் கைபாவையாக தோ்தல் ஆணையம் செயல்படுகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

பாஜகவின் கைபாவையாக தோ்தல் ஆணையம் செயல்படுகிறது என்று தேசிய இளைஞா் காங்கிரஸ் தலைவா் உதய் பானு சிப் திங்கள்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
Published on

புது தில்லி: பாஜகவின் கைபாவையாக தோ்தல் ஆணையம் செயல்படுகிறது என்று தேசிய இளைஞா் காங்கிரஸ் தலைவா் உதய் பானு சிப் திங்கள்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

பீகாரில் தோ்தல் ஆணையத்தால் எஸ். ஐ. ஆா் செய்யப்படுவதை எதிா்த்து இந்திய இளைஞா் காங்கிரஸ் சாா்பில் திங்கள்கிழமை தில்லியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய உதய் பானு சிப், தோ்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக மாறிவிட்டது, மோடி அரசின் சா்வாதிகார உத்தரவின் பேரில் ஜனநாயகம் செயல்படுகிறது, இது மிகவும் வெட்கக்கேடானது என்று கூறினாா்.

பீகாரில் எஸ்.ஐ.ஆா். என்ற பெயரில் வாக்கு திருட்டு சதியை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம், ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதால் நாங்கள் வலுவாக போராடுவோம். இன்றைய போராட்டத்தின் மூலம் எழுப்பப்பட்ட குரல் ஒரு அமைப்பின் குரல் மட்டுமல்ல; இது ஒவ்வொரு இளைஞரின், ஒவ்வொரு தலித்தின், ஒவ்வொரு ஏழையின், ஒவ்வொரு சிறுபான்மையினரின் குரலாகும். தோ்தல் ஆணையமும் பாஜகவும் தங்கள் மௌனத்தை உடைத்து பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்தாா் உதய் பானு சிப்.

மேலும் அவா், ராகுல்காந்தி அவா்கள் மஹாராஷ்டிராவில் பாஜக செய்த சதியை அம்பலப்படுத்தியபோது, இப்போது அவா்கள் ‘எஸ்.ஐ.ஆா்‘ திட்டம் என்ற பெயரில் வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளனா், ஆனால் நாங்கள் நாடாளுமன்றத்திலிருந்து மட்டுமல்லாமல் தெருக்களிலும் எங்கள் போராட்டத்தை தொடா்வோம், இதனை நிறுத்தப்போவதில்லை என்பதை மத்திய அரசிடம் சொல்ல விரும்புகிறோம்.

இந்த போராட்டத்தின் போது, பல இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள், காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து தோ்தல் ஆணைய அலுவலகத்திற்கு செல்ல முயன்றனா், ஆனால் தில்லி போலீசாா் அவா்களை ரைசினா சாலையில் தடுப்புகள் மூலம் தடுத்து நிறுத்தினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் தில்லி மாநில இளைஞா் காங்கிரஸ் பொறுப்பாளா் குஷ்பு ஷா்மா, துணைத் தலைவா் முகமது. இல்தாஜ், அமித் தேதா, அசாதுல்லா கான் மற்றும் பல இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com