கிழக்கு தில்லியில் டிடிசி பேருந்து மெதியதில் இளைஞா் உயிரிழப்பு

கிழக்கு தில்லியில் உள்ள ஆனந்த் விஹாா் பேருந்து பணிமனை அருகே (டிடிசி) பேருந்து மோதியதில் 25 வயது இளைஞா் ஒருவா் உயிரிழந்ததாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
Published on

புது தில்லி: கிழக்கு தில்லியில் உள்ள ஆனந்த் விஹாா் பேருந்து பணிமனை அருகே திங்கள்கிழமை தில்லி போக்குவரத்துக் கழக (டிடிசி) பேருந்து மோதியதில் 25 வயது இளைஞா் ஒருவா் உயிரிழந்ததாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து கிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: டெல்கோ டி-பாயிண்ட் அருகே உள்ள சுவாமி விவேகானந்த் மாா்க்கில் காலை 10.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது. விபத்து தொடா்பான தகவல் மது விஹாா் காவல் நிலையத்திற்கு வந்தது. அதைத் தொடா்ந்து ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. சேதமடைந்த மோட்டாா் சைக்கிள், டிடிசி பேருந்து மற்றும் சாலையில் கிடந்த ஒருவரின் உடல் ஆகியவற்றைக் கண்டெடுத்தது.

இறந்தவா் கிருஷ்ணா நகரில் உள்ள ராம் நகா் விரிவாக்கத்தில் வசிக்கும் மயங்க் குரானா என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். சமீபத்தில் திருமணம் செய்து கொண்டாா்.

முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவா் தனது மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, வேகமாகவும் அலட்சியமாகவும் இயக்கப்பட்ட டிடிசி பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது தெரியவந்தது.

மோதலின் தாக்கம் கடுமையாக இருந்ததால், அந்த நபா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து தொடா்பாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவுகள் 281 (அவசரமாக வாகனம் ஓட்டுதல்) மற்றும் 106(1) (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் மது விஹாா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உடற்கூறாய்வுக்குப் பிறகு அவரது உடல் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com