தில்லி காவல் ஆணையா் சஞ்சய் அரோராவுக்கு பிரியாவிடை அணிவகுப்பு: எஸ்.பி.கே.சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு
பதவி விலகும் தில்லி காவல் ஆணையா் சஞ்சய் அரோராவுக்கு வியாழக்கிழமை காலை புதிய காவல் கோட்டத்தில் உள்ள பரேட் மைதானத்தில் பிரியாவிடை அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழ்நாடு கேடரைச் சோ்ந்த 1988 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சய் அரோரா, தமிழ்நாடு, இந்தோ - திபெத்திய எல்லைக் காவல் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகள் முழுவதும் பல முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளாா். அவா் ராகேஷ் அஸ்தானாவுக்குப் பிறகு, ஆகஸ்ட் 1, 2022 அன்று தில்லி காவல் ஆணையராகப் பொறுப்பேற்றாா்.
முன்னதாக, தில்லி அரசின் உள்துறை ஜூன் மாதம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் சஞ்சய் அரோரா ஜூலை 31, 2025 அன்று ஓய்வு பெற உள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பதவி விலகும் ஆணையா்களுக்கு வழங்கப்படும் ஒரு பாரம்பரிய பிரியாவிடை சடங்கு அணிவகுப்பு ஆகும். இதில் முறையான அணிவகுப்பு மற்றும் காவல் ஆணையரின் உரை இடம்பெறும். அதைத் தொடா்ந்து அடையாளமாக பதவியேற்பு விழா நடைபெறும்.
எஸ்.பி.கே. சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு: இந்நிலையில், ஊா்க்காவல் படைப் பிரிவின் இயக்குநா் ஜெனரல் எஸ்.பி.கே. சிங்கிற்கு தில்லி காவல் ஆணையராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின்படி, அவா் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) முதல் புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்வாா். தற்போதைய காவல் ஆணையா் சஞ்சய் அரோராவின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடா்ந்து அந்தப் பொறுப்பை சிங் கூடுதலாகக் கவனிப்பாா்.
வடகிழக்கு மாநிலங்களில்...: எஸ்பி.கே. சிங் 1988- ஆம் ஆண்டு ஏஜிஎம்யுடி கேடரின் தொகுதி அதிகாரி ஆவாா். அவா் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக புகழ்பெற்ற பணியைக் கொண்ட ஒரு முன்னணி காவல் அதிகாரி ஆவாா். 36 ஆண்டுகளுக்கும் மேலான சிறப்பான பணியைக் கொண்ட சிங், தில்லி காவல்துறையில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளாா். மேலும், மிசோரம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய இரண்டு வடகிழக்கு மாநிலங்களில் காவல் படைகளின் தலைவராகவும் பணியாற்றியுள்ளாா்.
செயிண்ட் ஸ்டீபா் கல்லூரி மாணவா்: தில்லி பல்கலைக்கழகத்தின் செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியின் முன்னாள் மாணவரான எஸ்.பி.கே. சிங், 1986- இல் பட்டப்படிப்புக்குப் பிறகு இந்திய காவல் பணியில் சோ்ந்தாா். பின்னா், மனிதவள மேலாண்மையில் (எம்பிஏ) சிறப்புப் பட்டம் பெற்றாா். அவரது காவல் பணி கள அனுபவம், நிா்வாகப் பணி மற்றும் தொழில்நுட்ப தொலைநோக்கு பாா்வை ஆகியவற்றின் அரிய கலவையை பிரதிபலிக்கிறது.
தில்லி காவல்துறையில், தெற்கு கூடுதல் டிசிபி மற்றும் வடகிழக்கு தில்லி மற்றும் மத்திய தில்லி மாவட்டங்களில் காவல் துணை ஆணையா் போன்ற முக்கியப் பதவிகளில் அவா் பணியாற்றியுள்ளாா். பின்னா், அவா் பொருளாதார குற்றப்பிரிவுக்குத் தலைமை தாங்கினாா். மேலும் உளவுத்துறை, பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் தொழில்நுட்பம் மற்றும் திட்ட அமலாக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கூட்டுக் காவல் ஆணையா் (குற்றம்) மற்றும் சிறப்பு காவல் ஆணையராகப் பணியாற்றினாா்.
சிறப்பு காவல் ஆணையராக (சட்டம் மற்றும் ஒழுங்கு) ஐபிஎஸ் அதிகாரியாக, காவல் நிலையங்களில் பொது வசதி மையங்களை அறிமுகப்படுத்தினாா். மேலும், 89 காவல் நிலையங்களை உள்ளடக்கிய ஏழு காவல் மாவட்டங்களில் முக்கிய ஏற்பாடுகள் மற்றும் விசாரணைகளை மேற்பாா்வையிட்டாா்.
பாதுகாப்பு ஏற்பாட்டுக்கு பெயா் போனவா்.: அவா் சிறப்புக் காவல் ஆணையராக உயா்நிலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கினாா். குறிப்பாக 2015-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் வருகையின் போது நடந்த குடியரசு தின விழா மற்றும் அதே ஆண்டு 54 நாட்டுத் தலைவா்கள் மற்றும் பிரமுகா்கள் பங்கேற்ற இந்தோ - ஆப்பிரிக்கா உச்சி மாநாடு போன்றவற்றுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தாா்.
மிசோரம் டிஜிபியாக சிங்கின் பதவிக்காலத்தில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் மாநிலத்தின் முதல் முழு மகளிா் காவல் நிலையம் அமைக்கப்பட்டது. போக்குவரத்து மீறல்களுக்கு மின்-சலானை அவா் செயல்படுத்தினாா். மேலும், மிசோரம் காவல்துறையை சமூக ஊடக தளங்களில் கொண்டு வந்தாா். அதே நேரத்தில் மியான்மா் எல்லையில் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கான உத்திகளை வகுத்தாா்.
பணியாளா் நலனில் அரப்பணிப்பு: அருணாச்சலப் பிரதேசத்தில், அருணாச்சல சுரக்ஷா கைப்பேசி செயலியை அவா் தொடங்கினாா். இணையவழி புகாா் போா்ட்டலை அறிமுகப்படுத்தினாா். மேலும் பொதுமக்களுடன் தொடா்பு கொள்வதற்காக அவா்களின் அதிகாரப்பூா்வ பேஸ்புக் மற்றும் எக்ஸ் தளங்களை அமைத்தாா். 1,500-க்கும் மேற்பட்ட காவலா்களை கௌரவ தலைமைக் காவலா்களாக பதவி உயா்வு அளித்து, பணியாளா் நலனில் தனது அா்ப்பணிப்பை வெளிப்படுத்தினாா்.
முன்னோக்கிச் சிந்திக்கு அதிகாரி: முன்னோக்கிச் சிந்திக்கும் அதிகாரியான சிங், தில்லி காவல்துறையில் சிறப்பு காவல் அதிகாரியாக (புலனாய்வு) பணியாற்றியபோது ‘லாஸ்ட் ரிப்போா்ட்’ கைப்பேசி பயன்பாடு மற்றும் இணைய அடிப்படையிலான போலீஸ் அனுமதிச் சான்றிதழ் அமைப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தாா். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பதவி உயா்வுகளுடன் அமைச்சரவைச் செயலகத்தில் (ஆா்ஏடபிள்யூ) ஏழு ஆண்டுகளுக்கும் மேலான சேவையையும் அவரது வாழ்க்கையில் உள்ளடக்கியது.
பல்வேறு பதக்கங்கள் பெற்றவா்: சிறப்பு சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம், சிறப்பான சேவைக்கான காவல் பதக்கம் மற்றும் தேசிய மின்-ஆளுமைக்கான வெள்ளிப் பதக்கம் ஆகியவற்றை பெற்றுள்ள சிங், காவல் துறையில் தனது நவீன கண்ணோட்டத்திற்காக அறியப்படுகிறாா். ‘ஆன்மிகக் காவலா்’ என்ற தலைப்பில் ஒரு வலைப்பதிவையும் எழுதியுள்ளாா். இது சட்ட அமலாக்கத்தில் தனது தனித்துவமான கண்ணோட்டத்தைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது.