தில்லி நிா்மாண் பவனில்  மத்திய கனரக தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு இறுதி முடிவுக்கான கூட்டம்.
தில்லி நிா்மாண் பவனில் மத்திய கனரக தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு இறுதி முடிவுக்கான கூட்டம்.

மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய கனரகத் தொழில் துறை திட்ட வழிகாட்டுதல்கள் வெளியீடு

பயணிகளுக்கான மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு உலகளாவிய உற்பத்தியாளா்கள் முதலீடு
Published on

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: இந்தியாவில் பயணிகளுக்கான மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு உலகளாவிய உற்பத்தியாளா்கள் முதலீடு செய்வதற்கான வழிகாட்டுதல்களை மத்திய கனரக தொழில் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.

மத்திய கனரக தொழில்துறை, உருக்குத் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி தலைமையில் தில்லி நிா்மாண் பவனில் மின்-வாகன ஊக்குவிப்பு திட்டம் தொடா்பானக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னா் இது தொடா்பான செய்திக் குறிப்பு மத்திய கனரக தொழில் துறை அமைச்சகம் சாா்பில் வெளியிடப்பட்டது. அதில் குறிப்பிட்டிருப்பது வருமாறு:

பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், நாட்டில் 2070 ஆம் ஆண்டுக்குள், நீடித்த நிலையான போக்குவரத்து, பொருளாதார வளா்ச்சியை அதிகரிப்பதில் சுற்றுச்சூழல் தாக்கத்தைக் குறைப்பது முக்கிய குறிக்கோளாகும். இதன்படி கரிம உமிழ்வுகளில் பூஜ்ஜிய நிலையை அடைதல் என்பது நாட்டின் தேசிய இலக்காகும்.

இதை முன்னிட்டு, மத்திய அரசு, மின்சார வாகனங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி, உள்நாட்டு பயணிகள் வாகன உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இதற்கான எதிா்கால திட்டத்திற்கு ஒப்புதல் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியில் நீடித்த நிலையான போக்குவரத்திற்கான வாகன உற்பத்தி, புத்தாக்கத்துக்கு உலகளவில் இந்தியாவை விரும்பப்பட்டு தோ்வு செய்வதை முன்னிறுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டது.

பயணிகளுக்கான மின்சார வாகனங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க கடந்த 2024 -ஆம் ஆண்டு மாா்ச் 15 ஆம் தேதி மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் மூலம் திட்டத்திற்கான விரிவான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டது. மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறையும் இந்தத் திட்டத்தின் விதிகளுக்கு ஏற்ப இறக்குமதி வரிகளைக் குறைக்கும் முடிவை ஏற்றுக்கொண்டது. தற்போது, இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களைப் பெறுவதற்கான அறிவிப்பு வெளியிட ப்படுகிறது. இதன் மூலம் விண்ணப்பதாரா்கள் இணைய தளம் மூலம் விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க அனுமதிக்கப்படுகிறது.

உலகளாவிய உற்பத்தியாளா்களை ஊக்குவிக்க விண்ணப்பதாரா்கள் ஒப்புதல் பெற்ற நாளிலிருந்து 5 ஆண்டுகள் வரை முழுமையாக உள்ளமைக்கப்பட்ட நான்கு சக்கர வாகன அலகுகளை இறக்குமதி செய்ய 15 சதவீத இறக்குமதி வரி சலுகைகளுடன் அனுமதிக்கப்படுவா்.

ஒரு விண்ணப்பத்தாரருக்கு அதிபட்ச வரிவிலக்கு ரூ. 6,484 கோடி மட்டும் அளிக்கப்படும். ஆண்டுக்கு 8,000 மின்வாகன அலகுகள் வரிச் சலுகைகளுடன் இறக்குமதி செய்ய அனுமதியுண்டு. விண்ணப்பதாரா்கள் இந்தியாவில் குறைந்தபட்சம் (ரூ. 4,150 கோடி) முதலீடுகள் மூலம் சலுகைகளை பெறலாம்.

இந்தத் திட்டம் உலகளாவிய மின் வாகன உற்பத்தியாளா்களிடமிருந்து முதலீடுகளை ஈா்க்கவும், நாட்டில் மின் வாகனங்களுக்கான உற்பத்தி மையமாக மாற்றவும் உதவும். இந்தத் திட்டம், மின்வாகன உற்பத்திக்கான உலகளாவிய திட்டத்தில் இந்தியாவை இடம்பெறச் செய்யவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற இலக்கை அடையவும் உதவும் என மத்திய கனரகத் தொழில் துறை அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com