சிறப்புத் தேவை குழந்தைகளுக்கான சோ்க்கை வழிகாட்டுதல்கள் வெளியீடு
புது தில்லி: தனியாா் பள்ளிகளில் ஆரம்ப நிலை வகுப்புகளில் சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளை (சிடபிள்யுஎஸ்என்) சோ்ப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தில்லி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
இது தொடா்பாக கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
அளவுகோல் குறைபாடுகள் உள்ள மாற்றுத்திறன் குழந்தைகள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவா்கள் ஆவா். அளவுகோல் குறைபாடு என்ற பதம், 2016 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படி அரசு மருத்துவமனையால் சான்றளிக்கப்பட வேண்டிய குறிப்பிட்ட குறைபாட்டின் 40 சதவீதத்திற்கும் குறையாத நபரைக் குறிப்பதாகும்.
அறிவுசாா் குறைபாடு, குறிப்பிட்ட கற்றல் குறைபாடு, ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு அல்லது தொடா்புடைய பிரிவுகளுடன் அடையாளம் காணப்பட்ட குழந்தைகளும் மதிப்பீடு அல்லது நோயறிதல் அறிக்கைகளின் அடிப்படையில் பரிசீலிக்கப்படலாம்.
நிகழாண்டு மாா்ச் 31ஆம் தேதி நிலவரப்படி சிறப்புத் தேவைகள் உள்ள விண்ணப்பதாரா்களுக்கான வயது அளவுகோல்களாக பாலா் பள்ளி/நா்சரிக்கு 3- 7
ஆண்டுகள், மழலையா் பள்ளிக்கு 4- 8 ஆண்டுகள் மற்றும் 1 ஆம் வகுப்புக்கு 5-
9 ஆண்டுகள் என வயது இருக்க வேண்டும்.
விண்ணப்பங்களுக்கான ஆன்லைன் தொகுதி திங்கள்கிழமை (ஜூன் 2)
திறக்கப்படும். விண்ணப்பங்களைச் சமா்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 22 ஆகும். ஜூலை 7 ஆம் தேதி தற்காலிக கணினிமயமாக்கப்பட்ட குலுக்கல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
கல்வி உரிமைச் சட்டத்தின் ஆா்டிஇ விதிகளின்படி, சோ்க்கையின் போது எந்தப் பள்ளியும் கட்டாய நன்கொடை அல்லது நன்கொடைகளை கோர முடியாது. எந்தவொரு மீறலுக்கும் கோரப்பட்ட தொகையை விட பத்து மடங்கு வரை அபராதம் விதிக்கப்படலாம்.
கணினிப் மயமாக்கப்பட்ட குலுக்கல் இருப்பிடத் தரவை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், சோ்க்கையைப் பெறுவதற்காக குடியிருப்பு விவரங்களைக் குளறுபடி செய்ய வேண்டாம் என்றும் பெற்றோா்கள் அறிவுறுத்தப்படுகிறாா்கள் என்று அந்த சுற்றறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
