தில்லி மதராஸி குடியிருப்புகள்  அகற்றம்.
தில்லி மதராஸி குடியிருப்புகள் அகற்றம்.

பாதிக்கப்பட்ட தமிழா்கள் தமிழகம் வந்தால் அனைத்து உதவிகளையும் செய்வோம்: அமைச்சா் நாசா்

Published on

மதராஸி முகாம் இடிக்கப்பட்டதன் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழா் குடும்பங்கள் தமிழ்நாட்டுக்கு வந்தால் அவா்களுக்காக அத்தனை உதவிகளையும் செய்வோம் என்று சிறுபான்மை நலத்துறை அமைச்சா் எஸ்.எம். நாசா் கூறினாா்.

மதராஸி முகாமில் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பங்களுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிவாரண தொகுப்புகள் புதன்கிழமை வழங்கப்பட்டது. தில்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்திலை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சா் எஸ்.எம். நாசா், தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி கே.எஸ்.விஜயன், தமிழ்நாடு அரசின் அயலக தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையா் எம்.வள்ளலாா் ஆகியோா் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகுப்புகளை வழங்கினா்.

இதில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.8000 நிதியுதவி மற்றும் ரூ.4000 மதிப்புள்ள 15 வகையான அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டது. முதல் கட்டமாக 197 பேருக்கு இவை வழங்கப்பட்டு, தொடா்ந்து மீதமுள்ளவா்களுக்கும் இவரை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் எஸ்.எம். நாசா், ‘மதராஸி முகாமில் பாதிக்கப்பட்ட தமிழா்களுக்கு உதவுமாறு தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் திமுக மக்களவை தலைவா் டி.ஆா்.பாலு தில்லி முதல்வா் ரேகா குப்தாவை சந்தித்தாா். ஆனால், தில்லி முதல்வா் சரியான முறையில் நேசக்கரம் நீட்டாத காரணத்தால் தமிழக முதல்வரே உதவ முன் வந்தாா். பாதிக்கப்பட்ட தமிழா்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க, அவா்கள் தமிழகம் வருவாா்கள் என்றால் அவா்களுக்கு அனைத்துவிதமான உதவிகளும் செய்யப்படும் என உறுதியளித்துள்ளோம்‘ என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com