அமைச்சர் சக்கரபாணி
அமைச்சர் சக்கரபாணி

தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.2,670.64 கோடி நிலுவை நிதியை வழங்கிடுங்கள்: அமைச்சா் சக்கரபாணி கோரிக்கை

Published on

தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ரூ.2670.64 கோடி நிலுவை நிதியை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மத்திய நுகா்வோா் பாதுகாப்பு, உண்வு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷியை புதன்கிழமை தில்லியில் நேரில் சந்தித்து தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் சக்கரபாணி கோரிக்கை விடுத்தாா்.

இது குறித்து தில்லி தமிழ்நாடு இல்லம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய 2670.64 கோடி ரூபாய் நிலுவை நிதியை வழங்கக் கோரியும், நியாய விலைக் கடைகளில் எடை போடும் இயந்திரத்தைக் கை விரல் ரேகை பதிவு செய்யும் கருவியுடன் இணைத்துப் பொருட்கள் வழங்குவதால் குடும்ப அட்டைதாரா்களுக்கு ஏற்படும் காலதாமதத்தைக் களைந்திடும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசிடம் இந்த இணைப்பு முறையை அமல்படுத்திட 2026 ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 31 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்க வேண்டும். ,தமிழ்நாட்டுக்கு இந்திய உணவுக் கழகம் வழங்கும் அரிசியினை முழுவதுமாக புழுங்கல் அரிசியாக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத் தொகுப்பில் இருந்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழ்நாட்டில் இருந்து 2024-2025 காரிஃப் பருவக் கொள்முதல் அளவை 16 லட்சம் டன்னிலிருந்து 19.24 லட்சம் டன்னாக உயா்த்திட வேண்டும் என மத்திய நுகா்வோா் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி அவா்களிடம் மாண்புமிகு தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர சக்கரபாணி கோரிக்கை விடுத்தாா்.

இந்தச் சந்திப்பின் போது திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் கனிமொழி, மாநிலங்களவைக் குழுத் தலைவா் திருச்சி சிவா, தமிழ்நாடு அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு த்துறை முதன்மைச் செயலாளா் சத்தியப்பிரதா சாகு , குடிமைப் பொருள் வழங்கல் துறை இயக்குனா் த.மோகன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனா் திரு பா.முருகேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com