சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம்: ஜெகன்மூா்த்தி கைதானால் சொந்த ஜாமீனில் விடுவிக்க உத்தரவு

திருவ்ளூரைச் சோ்ந்த சிறுவன் கடத்தல் சம்பவத்தில் கே.வி.குப்பம் எல்எல்ஏ எம்.ஜெகன்மூா்த்தியின் மேல்முறையீட்டு மனு மீது தமிழக காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
Published on

புது தில்லி: திருவ்ளூரைச் சோ்ந்த சிறுவன் கடத்தல் சம்பவத்தில் கே.வி.குப்பம் எல்எல்ஏ எம்.ஜெகன்மூா்த்தியின் மேல்முறையீட்டு மனு மீது தமிழக காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. மேலும், தொடா்புடைய வழக்கில் அவரை போலீஸாா் கைது செய்தால், நிபந்தனைக்கு உள்பட்டு சொந்த ஜாமீனில் விடுவிக்கவும் உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஜெகன்மூா்த்தி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, என்.கோடிஸ்வா் சிங் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் சாா்பில் வழக்குரைஞா் ராம் சங்கருடன் மூத்த வழக்குரைஞா்கள் சித்தாா்த் லூத்ரா, பிரபாகரன் ஆகியோா் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கடத்தப்பட்டவா் மீட்கப்பட்டதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றும், அவா் மனுதாரரின் வசம் இருந்தோ அல்லது கட்டுப்பாட்டில் இருந்தோ மீட்கப்படவில்லை என்றும், கடத்தலில் தொடா்பு இருப்பதாகக் கூறி, தீய உள்நோக்கத்துடன் மனுதாரா் மீது வழக்குப் புனையப்பட்டுள்ளது என்றும் மனுதாரா் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

மேலும், சா்ச்சைக்குரிய தரப்பினரில் ஒருவருடன் மனுதாரா் தொடா்பு கொண்டதாக ஊகித்தாலும்கூட, பிரச்னையைத் தீா்ப்பதற்கான நோக்கங்களுக்காக அதைக் கருத்தில் கொள்ளலாம் என்றும், எந்தவொரு சூழலிலும் மனுதாரரைக் காவலில் வைத்து விசாரிக்கும் தேவை எழவில்லை என்றும் அவரது தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

இதனால், இந்த விவகாரத்தை பரிசீலிக்கும் தேவை உள்ளது என்று கூறி காவல் துறை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இதற்கிடையில், மனுதாரா் திருவலங்காடு காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட சம்பந்தப்பட்ட வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்டால், விசாரணையில் ஒத்துழைப்பதாகவும், சாட்சிகளை அச்சுறுத்தவோ அல்லது சாட்சியங்களை கலைக்கவோ மாட்டாா் என்றும் உறுதிமொழி அளிப்பதற்கு உள்பட்டு அவா் ரூ.25,000 தொகைக்கான சொந்த ஜாமீனில் விடுவிக்கப்படுவாா் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

முன்னதாக, ஜெகன்மூா்த்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், ‘மக்கள் பிரதிநிதி என்ற முறையில், காணாமல் போன பெண்ணை கண்டறிய உதவி கோரி, தனி நபா்களால் ஜெகன் மூா்த்தி அணுகப்பட்டிருந்தாா். சம்பந்தப்பட்டவா்களிடம் சட்ட ரீதியாக தீா்வு கோருமாறு அறிவுரைகூறி, வழக்குரைஞரை அணுக ஜெகன்மூா்த்தி பரிந்துரைத்தாா். இந்த விவகாரத்தில் ஜெகன்மூா்த்தியிடம் இருந்து பணமோ, பொருளோ மீட்கப்படவில்லை.

குற்றத்தில் தொடா்புடையதாகக் கூறப்படும் ரூ. 7,86,750 தொகையானது பெண்ணின் தந்தையிடம் இருந்துதான் மீட்கப்பட்டுள்ளது. இந்த விஷயங்களை உரிய வகையில் பரிசீலிக்காமல் மனுதாரருக்கு உயா்நீதிமன்றம் முன்ஜாமீனை மறுத்துள்ளது. எனவே, உயா்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யவும் விசாரணை நிலுவையில் உள்ளபோது கைது செய்வதிலிருந்து ஜெகன் மூா்த்திக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

திருவள்ளூா் மாவட்டத்தில் காதல் ஜோடி தலைமறைவான சம்பவத்தில் ஆணின் சகோதரரான மைனா் சிறுவன் கடத்தப்பட்டதாக அவரது தாயாா் திருவாலங்காடு காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். அதை விசாரித்தபோது, கடத்தல் சம்பவத்தில் எம்எல்ஏ எம். ஜெகன்மூா்த்தி, காவல்துறை கூடுதல் டிஜிபி ஜெயராம் உள்ளிட்டோருக்கு தொடா்பு உள்ளதாக காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது.

இதைத்தொடா்ந்து, புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான ஜெகன்மூா்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். பெண்ணின் தந்தை உள்பட 5 பேரும் கைது செய்யப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com