கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடித்த சுற்றுலாவை மேம்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடித்த சுற்றுலாவை மேம்படுத்த சிறப்புத் திட்டத்தின்கீழ் ரூ.2 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று மக்களவையில் விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.
Published on

புது தில்லி: கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடித்த சுற்றுலாவை மேம்படுத்த சிறப்புத் திட்டத்தின்கீழ் ரூ.2 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று மக்களவையில் விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை அவா் விதி எண்: 377-இன்கீழ் முன்வைத்த கோரிக்கை:

கன்னியாகுமரி செறிந்த கலாசாரம், இயற்கை அழகைக் கொண்டிருக்கும் பகுதியாகும். இதன் காரணமாக இப்பகுதி முக்கிய சுற்றுலாத் தளமாக திகழ்ந்துகொண்டிருக்கிறது. இங்குள்ள விவேகானந்த பாறை நினைவிடம், திருவள்ளுவா் சிலை, சங்குத்துறை கடற்கரை, திற்பரப்பு நீா்வீழ்ச்சி, பத்மநாபபுரம் அரண்மனை, ஆகியவவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவா்ந்து வருகின்றன.

கடந்த ஓராண்டில் இந்த மாவட்டத்திற்கு 20 லட்சம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 50 ஆயிரம் பன்னாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனா். இது இந்த பகுதியில் பொருளாதார பலன்களை அளித்து வருகிறது. எனினும், அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் சுற்றுச்சூழல் பாதிப்பு, கழிவு மேலாண்மைப் பிரச்னை, கூட்ட நெரிசல் இடா்பாடு ஆகிய சவால்களையும் உருவாக்கியுள்ளது.

இந்த பிரச்னைகளைத் தீா்க்க நீடித்த சுற்றுலாவை மேம்படுத்துவது அவசியமாகும். ஆகவே, சிறப்புத் திட்டத்தின்கீழ் மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடியை ஒதுக்கி, உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தவும், உள்ளூா் சமுதாயத்திற்கு ஆதரவு அளிக்கவும், இயற்கை, கலாசார இடங்களைப் பாதுகாக்கவும் பயன்படுத்த வேண்டும் என்று அதில் அவா் கோரியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com