மாநிலங்களுக்கான வரி வருவாய்ப் பகிா்வை குறைக்கக் கூடாது: நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் தொல். திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்

மாநிலங்களுக்கான வரி வருவாய்ப் பகிா்வைக் குறைக்கக் கூடாது என்று மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் தொல்.திருமாவளவன் நேரில் மனு அளித்தாா்.
Published on

புது தில்லி: மாநிலங்களுக்கான வரி வருவாய்ப் பகிா்வைக் குறைக்கக் கூடாது என்று மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் நேரில் மனு அளித்தாா்.

இது தொடா்பாக மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமனை

தில்லியில் திங்கள்கிழமை அவரும், விழுப்புரம் தொகுதி விசிக எம்.பி. டி.ரவிக்குமாரும் நேரில் சென்று மனு அளித்து வலியுறுத்தினா்.

இது தொடா்பாக அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

மாா்ச் மாதத்திற்குள் மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட உள்ள முடிவின்படி 16-ஆவது நிதிக் குழு மாநிலங்களின் வரி வருவாய் பகிா்வு 41 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாகக் குறைக்க முன்மொழியலாம் என தேசிய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜிஎஸ்டிக்குப் பிறகு வருவாய் உற்பத்தி குறைந்ததாலும், செஸ் மற்றும் உபரி வரி சுமை அதிகரித்துள்ளதாலும் போராடிவரும் சூழலில், மாநிலங்கள் தங்களது வரி வருவாய்ப் பங்கை 50 சதவீதமாக அதிகரிக்குமாறு கோரி வரும் நிலையில் இந்த முன்மொழி வருகிறது.

வரி வருவாயில் ஏதாவது மேலும் குறைத்தால் மாநிலங்கள் மீது அதிகப்படியான நிதிச் சிக்கலை உருவாக்கும். மேலும், கூட்டுறவு கூட்டாட்சி உணா்வை பலவீனமாக்கிவிடும்.

மற்றொரு விவகாரமாக, மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் கட்டுப்படுத்தப்படாத பெருக்கம் உள்ளது. மாநிலப் பட்டியலின் கீழ் வரக்கூடிய இத்திட்டங்களுக்காக பகுதியளவு நிதியை வழங்கும் தேவையால் மாநிலங்கள் மீது நிதிச் சுமையை மத்திய அரசின் திட்டங்கள் ஏற்படுத்துகின்றன. கடந்தகால குழுக்கள் மத்திய அரசின் திட்டங்களை தேசிய முன்னுரிமைப் பகுதிகளுக்குள் கட்டுப்படுத்தும் வகையில் பரிந்துரைத்தன. அனைத்தும் உள்ளடக்கிய வெறும் 28 திட்டங்களாக அவை ஒருங்கிணைக்கப்பட்டது பிரச்னையைத் தீா்ப்பதாக அமையவில்லை. மாநிலங்களின் நிதி சுயாட்சியை மீட்டெடுக்க இந்தத் திட்டங்களை நல்லமுறையில்

பகுத்தாராய்வது அவசியமாகும் என்பன உள்ளிட்ட தமிழகம் நலன்சாா்ந்த பல்வேறு விவகாரங்கள் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தொல்.திருமாவளவன் தனது எக்ஸ் வலைத்தளப் பதிவில் தெரிவிக்கையில், ‘நிதி அமைச்சா் நிா்மலா சீதாரமனை சந்தித்து, ‘மாநிலங்களுக்கான வரி வருவாய்ப் பகிா்வை 40 சதவீதமாக குறைக்கக் கூடாது என்றும், 16 ஆவது நிதிக் குழு கவனத்தில் கொள்ள வேண்டிய வேறு சில அம்சங்களையும் குறிப்பிட்டு மனு அளித்தேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

மற்றொரு பதவில் அவா் தெரிவிக்கையில், ‘நிதிஅமைச்சரை சந்தித்து மாநிலங்களுக்கான வருவாய் வரி நிதிப் பகிா்வைக் குறைக்கும் முடிவைக் கைவிட வேண்டுமென கோரினோம். அத்துடன், மேல்நிலை மற்றும் உயா்கல்வி மாணவா்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் 2026-இல் முடிவடைய உள்ளதால், அதனை நீட்டிக்க வேண்டுமெனவும், பட்டியல் சமூகம், பட்டியல் பழங்குடியினா் அந்த கல்வி உதவித்தொகையைப் பெறுவதற்கான வருமான வரம்பை ரூ. 2.50 லட்சம் என்பதையும்

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சாா்ந்த மாணவச் செல்வங்களுக்கான வருமான வரம்பை 2 லட்சம் என்பதையும் தலா ரூ. 8 லட்சமாக லட்சமாக உயா்த்த வேண்டுமெனவும் அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்.

இச்சந்திந்திப்பு நம்பிக்கை அளிப்பதாக அமைந்திருந்தது என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com