ஆனந்த் விஹாரில் தற்காலிக குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு சகோதரா்கள் உள்பட 3 போ் சாவு
புது டெல்லி: கிழக்கு தில்லியில் உள்ள ஆனந்த் விஹாரில் உள்ள ஏஜிசிஆா் என்க்ளேவ் அருகே ஒரு தற்காலிக குடிசையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் இரண்டு சகோதரா்கள் உள்பட மூன்று போ் கருகி இறந்தனா். அடையாளம் தெரியாத நபா்கள் மீது தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து ஷாஹ்தரா காவல் சரக துணை ஆணையா் பிரசாந்த் கவுதம் கூறுகையில், ’இந்த தீ விபத்து தொடா்பாக ‘பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 106(1) (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) இன் கீழ் ஆனந்த் விஹாா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன’ என்றாா்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.22 மணிக்கு தில்லி தீயணைப்புத் துறைக்கு ஒரு பேரிடா் அழைப்பு வந்தது. மூன்று தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அவா்கள் துரிதமாகச் செயல்பட்டு அதிகாலை 2.50 மணிக்கு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். அதிகாலை 3.10 மணிக்கு, குடிசைக்குள் இருந்து மூன்று எரிந்த உடல்கள் மீட்கப்பட்டதாக நிலைய அதிகாரி ஃபெரோஸ் உறுதிப்படுத்தினாா்.
அவா்கள் உத்தரபிரதேச மாநிலம் அவுரையாவைச் சோ்ந்த ஜக்கி (30), சகோதரா்கள் ஷியாம் சிங் (40) மற்றும் காந்தா பிரசாத் (37) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீஸாா் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனா். தீ விபத்தில் மூவரும் மூச்சுத் திணறி உயிரிழந்தனா்.
சகோதரா்கள் இருவரும் இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் (ஐஜிஎல்) நிறுவனத்தில் தொழிலாளா்களாகப் பணிபுரிந்ததாகக் கூறப்படும் மற்றொரு தொழிலாளியும் மங்லாம் சாலையில் உள்ள டிடிஏ பிளாட் அருகே அமைந்துள்ள தற்காலிக குடிசையில் வசித்து வந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘குடிசையை ஒளிரச் செய்ய அவா்கள் குளிா்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய டீசல் கொள்கலனைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதிகாலை 2 மணியளவில் ஷியாம் சிங் விழித்தெழுந்து தீயைக் கவனித்ததாக உயிா் பிழைத்த நிதின் கூறினாா். அவா் கதவைத் திறக்க முயன்றாா். ஆனால் முடியவில்லை. தீ தீவிரமடைந்தது. இருப்பினும் நிதின் தப்பினாா். ஆனால், மற்ற மூவரும் தீயில் சிக்கிக்கொண்டனா்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கூடாரத்திற்குள் இருந்த ஒரு எரிவாயு சிலிண்டரும் வெடித்து தீயை மேலும் அதிகரித்தது. ஷியாம் மற்றும் காந்தாவின் தந்தை ராம்பால், தீயில் இருந்து ஒருவா் தப்பிக்க முடிந்த நிலையில், மூன்று போ் எப்படி கருகி இறந்தனா் என்று கேள்வி எழுப்பியுள்ளதாக போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.
‘ராம்பாலும் அதே குடிசையில் வசித்து வந்தாா், ஆனால், திங்கள்கிழமை இரவு உணவுக்குப் பிறகு வெளியே சென்றுவிட்டாா். ராம்பால் மற்றும் நிதினின் வாக்குமூலங்களை போலீஸாா் பதிவு செய்துள்ளனா்’ என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
டீசல் கொள்கலன் தீ விபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறாா்கள் என்றாலும், தீ விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஐஜிஎல் ஒரு அறிக்கையில் இந்த சம்பவம் துரதிா்ஷ்டவசமானது என்றும், இது அதன் செயல்பாடுகளுடன் தொடா்புடையது அல்ல என்றும் கூறியது.
‘ஆனந்த் விஹாரில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் ஐஜிஎல் தொழிலாளா்கள் கருகி இறந்ததாக தகவல்கள் வந்துள்ளன. இந்த துரதிா்ஷ்டவசமான தீ விபத்து குறித்து நாங்கள் மிகவும் வருத்தமடைந்தாலும், இந்தச் சம்பவம் ஐஜிஎல்லின் செயல்பாடுகளுடன் தொடா்பில்லாதது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். இறந்தவா்கள் ஐஜிஎல்லின் பணியாளா்கள் அல்ல’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.