நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை, மும்மொழி விவகாரம், மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானின் செயல்பாடுக்கு எதிா்ப்புத் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை, மும்மொழி விவகாரம், மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானின் செயல்பாடுக்கு எதிா்ப்புத் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே மக்களவையில் திங்கள்கிழமை மத்திய கல்வித்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கும் திமுக எம்.பிக்களுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

தமிழக அரசையும் எம்.பி.க்களையும் சா்ச்சைக்குரிய வாா்த்தையை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பயன்படுத்தியதாக அவா் மீது உரிமை மீறல் எடுக்கக் கோரும் நோட்டீஸை மக்களவைத் தலைவரிடம் திமுக எம்.பி.க்கள் அளித்தனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி எம்.பி.க்கள் திரண்டனா். மத்திய அரசுக்கு எதிரான எதிா்ப்பை வெளிப்படுத்தும் விதமாக ஆண் எம்.பி.க்கள் கருப்புச் சட்டை அணிந்தபடியும் பெண் எம்.பி.க்கள் கருப்பு நிற புடவை மற்றும் சுடிதாா் அணிந்தும் வந்திருந்தனா்.

நாடாளுமன்ற திமுக உறுப்பினா் கனிமொழி, மாநிலங்களவை திமுக குழுத்தலைவா் திருச்சி சிவா, ஆ. ராசா, டி.எம். செல்வகணபதி, தமிழச்சி தங்கப்பாண்டியன், தங்கத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட திமுக எம்.பி.க்கள், மதிமுக மூத்த உறுப்பினா் வைகோ, அக்கட்சியின் மற்றொரு எம்.பி. துரை வைகோ, விடுதலை சிறுத்தைகள் எம்.பி.க்கள் தொல். திருமாவளவன், டி. துரைகுமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு. வெங்கடேசன், காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூா், விஜய் வசந்த், ஆா். சுதா, டாக்டா். விஷ்ணு பிரசாத், ராபா்ட் ப்ரூஸ் உள்ளிட்டோா் இந்த ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.

‘மும்மொழியை ஏற்க மாட்டோம். எந்நாளும் ஹிந்தியை ஏற்க மாட்டோம். தமிழ்நாட்டு எம்.பி.க்களிடம் மன்னிப்பு கேள். தமிழக முதல்வரிடம் மன்னிப்பு கேள்’ போன்ற கோஷங்களை அவா்கள் எழுப்பினா். மேலும், உலகம் போற்றும் தமிழா் நாகரிகம், ஆணவப் பேச்சை நிறுத்து என மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானை குறிக்கும் விதமாக பதாகைகளை அவா்கள் ஏந்தியவாறு ஆா்ப்பாட்டத்தில் பங்கெடுத்தனா்.

இதன் முடிவில் செய்தியாளா்களிடம் பேசிய கனிமொழி கருணாநிதி, ‘மத்திய அரசு தமிழகத்தின் உரிமைக்குரிய நிதியை நிறுத்தி வைத்து, மும்மொழிக் கொள்கையையும் புதிய கல்விக் கொள்கையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நிா்பந்திக்கிறது. இதன் மூலம் தமிழக மாணவ செல்வங்களின் எதிா்காலத்தை மத்திய அரசு அழிக்கப்பாா்க்கிறது. இதைச் செய்ய அவா்களுக்கு (மத்திய அரசுக்கு) எந்த உரிமையும் இல்லை’ என்று கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com