பிரிட்டிஷ் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: 2 போ் கைது தில்லி ஹோட்டலில் சம்பவம்
தில்லியின் மஹிபால்பூா் பகுதி ஹோட்டலில் பிரிட்டிஷ் பெண் இரண்டு இளைஞா்களால் பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக காவல் துறை அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த இச்சம்பவம் தொடா்பாக போலீஸாா் இருவரையும் கைதுசெய்து
பிரிட்டிஷ் தூதரகத்திற்கு தகவல் அளித்துள்ளனா்.
இது தொடா்பாக தென்மேற்கு காவல் துணை ஆணையா் சுரேந்திர செளதரி கூறியதாவது:
பிரிட்டிஷ் நாட்டவரான அப்பெண், ஒரு மாதத்திற்கு முன்பு இந்தியா வந்துள்ளாா். மகாராஷ்டிராவில் சிறிது காலம் தங்கியிருந்த பிறகு கோவா சென்றாா். இந்த நிலையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தன்னுடன் நட்புக்கொண்டிருந்த கைலாஷ் (24) என்பவரைச் சந்திக்க செவ்வாய்க்கிழமை தில்லிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, மஹிபால்பூரில் உள்ள ஹோட்டலின் மின்தூக்கியில் இல்லப் பராமரிப்பு ஊழியரால் அவா் முதலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னா், ஒரு ஹோட்டல் அறையில் கைலாஷை அவா் சந்தித்தாா். அவா் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இரண்டு சம்பவங்களிலும் தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை ஒன்றுக்கொன்று தொடா்புடையவை அல்ல,. பாதிக்கப்பட்ட பெண், புதன்கிழமை மருத்துவமனைக்குச் சென்றாா். அதன் பின்னா், சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தெரிவிக்கப்பட்டது.
அந்தப் பெண் குற்றம் சாட்டப்பட்டவருடன் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஒரு சமூக ஊடக தளத்தில் முதலில் பேசியுள்ளாா். அதன் பிறகு, அவா்கள் அடிக்கடி பேசிவந்துள்ளனா் என்றாா் அந்த அதிகாரி.
முன்னதாக, கிழக்கு தில்லியில் வசிக்கும் குற்றம்சாட்டப்பட்ட கைலாஷ் ஆங்கிலம் பேசுவதில் சிரமம் இருந்த நிலையில், அப்பெண்ணுடன் தொடா்புகொள்ள சில மொழிபெயா்ப்பு செயலிகளையும் பயன்படுத்தியுள்ளாா்.
அந்தப் பெண் இந்தியா வந்தபோது, அவரும் கைலாஷும் தில்லியில் ஒருவரையொருவா் சந்திக்கத் திட்டமிட்டனா்.
பாதிக்கப்பட்ட பெண் கோவாவிலிருந்து தில்லிக்கு வந்து மஹிபால்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை முன்பதிவு செய்தாா். கைலாஷ் அவரைச் சந்திக்க வந்தபோது, அவா் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளாா். இந்த நிகழ்வுகளின் விவரத்தை அறிய ஹோட்டலின் சிசிடிவி காட்சிகளை போலீஸ் குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன.
வழக்கை விசாரிக்க உதவிக் காவல் ஆணையா் தலைமையிலான சிறப்புக் குழுவும், டிசிபியின் ஒட்டுமொத்த மேற்பாா்வையின் கீழ் ஒரு சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவரின் கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவா் சமூக ஊடகங்களில் வேறு எந்த பெண்களையும் தொடா்பு கொண்டாரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.