தில்லியில் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தைச் செயல்படுத்த அரசு ஏற்பாடு
ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (ஏபி-பிஎம்ஜெஏஒய்)
எனும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தேசிய சுகாதார ஆணையத்துடன் ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட தில்லி அரசு தயாராக வருவதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
இருப்பினும், புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கான இறுதித் தேதி இன்னும் முடிவாகவில்லை.
புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தும் 35ஆவது மாநில- யூனியன் பிரதேசமாக தில்லி மாறும். இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாத ஒரே மாநிலமாக மேற்கு வங்கம் இருக்கும்.
இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:
தேசிய தலைநகரில் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா விரைவில் செயல்படுத்துவதற்காக தேசிய சுகாதார ஆணையத்துடன் ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட தில்லி அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
மாா்ச் 18 அன்று இது கையெழுத்தாகும் என்று எதிா்பாா்க்கப்பட்டிருந்தது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது தில்லி சட்டப் பேரவைத் தோ்தலின்போது பாஜக அளித்திருந்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும். முந்தைய ஆம் ஆத்மி அரசு தங்களுக்கென ஒரு திட்டத்தை வகுத்திருந்தது. ஏபி-பிஎம்ஜெஏஒய் திட்டத்தை செயல்படுத்த மறுத்துவிட்டிருந்தது.
கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்ற தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றிபெற்று 26 ஆண்டுகளுக்கும் பிறகு தில்லியில் ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது.
இந்திய மக்கள்தொகையில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய 40 சதவீத கீழ்நிலையில் உள்ள மக்களைக் கொண்ட 12.37 கோடி குடும்பங்களைச் சோ்ந்த சுமாா் 55 கோடி பயனாளிகளுக்கு, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனையில் சோ்க்கும் வகையில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் சுகாதாரப் பாதுகாப்பை இத்திட்டம் வழங்குகிறது.
அக்டோபா் 29, 2024 அன்று, மத்திய அரசு இத்திட்டத்தை விரிவுபடுத்தியது. அதன்படி, இத்திட்டத்தில் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும், அவா்களின் சமூகபொருளாதார நிலையைப் பொருள்படுத்தாமல், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சைப் பலன்களை வழங்கி வருகிறது.