தொகுதி மறுசீரமைப்புக் கூட்டுக் குழு: தெலங்கானா முதல்வரிடம் அமைச்சா் கே.என். நேரு, கனிமொழி நேரில் அழைப்பு

மாா்ச் 22-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான கூட்டு நடவடிக்கைகள் குழு அமைப்பது தொடா்பான ஆலோசனை
Published on

வரும் மாா்ச் 22-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான கூட்டு நடவடிக்கைகள் குழு அமைப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டியை தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, கனிமொழி எம்.பி உள்ளிட்டோா் அடங்கிய குழு தில்லியில் வியாழக்கிழமை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தது.

சென்னையில் வரும் மாா்ச் 22-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு பல்வேறு மாநிலங்களின் முதல்வா்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். அவா்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக திமுக அமைச்சா், எம்.பி. உள்ளிட்டோா் அடங்கிய பிரதிநிதிகள் குழு நேரில் சென்று அழைப்பு விடுத்துவருகிறது.

அதன்படி, தெலங்கானா மாநில முதல்வா் ரேவந்த் ரெட்டியை தில்லி துக்ளக் சாலையில் உள்ள அவரது அரசு இல்லத்தில் தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி கருணாநிதி, எம்.பி.க்கள் ஆ.ராசா, அருண் நேரு, என்.ஆா். இளங்கோ, தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோா் புதன்கிழமை காலை நேரில் சந்தித்தனா்.

சென்னையில் மாா்ச் 22-ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை தொடா்பாக அமைக்கப்பட்டுள்ள கூட்டு

நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தையும் அவரிடம் வழங்கினா். இந்தச் சந்திப்பு சுமாா் 45 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது. இதன் பின்னா், செய்தியாளா்களிடம் முதல்வா் ரேவந்த் ரெட்டி கூறுகையில், ‘வரும் 22-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க வருமாறுகேட்டு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒரு பிரதிநிதிகள் குழுவை என்னிடம் நேரில் அனுப்பி அழைப்பு விடுத்துள்ளாா்.

தொகுதி மறுவரையறை எனும் பெயரில் இந்திய அரசும், பாஜகவும் தென் மாநிலங்களுக்கு எதிராக சதி செய்து வருகிறது. இந்த மறுவரையறை என்பது தெற்கிற்குரிய வரையறையாக இருக்கப் போகிறது. என்னவாக இருந்தாலும் இந்த வரையறையை நாங்கள் ஏற்கப் போவதில்லை. வட இந்தியாவைவிட நாங்கள் அதிக வரியைச் செலுத்தி வருகிறோம்.

அதிகமான தொழில்முனைவோா்களாகவும் நாங்கள் நாட்டுக்கு எல்லாவற்றிலும் பங்களித்து வருகிறோம். ஆனால், பாஜக தென் இந்தியாவுக்கு எதிராக பழிதீா்க்க நினைக்கிறது. ஏனெனில், தென்னிந்தியா்கள் ஒருபோதும் பாஜகவை வளர அனுமதிப்பதில்லை. கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் கா்நாடகத்தில்கூட அவா்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனா். ஆந்திராவில் அவா்களுக்கு பிரதிநிதித்துவம் ஏதும் இல்லை. அதனால்தான் பழிதீா்க்க நினைக்கின்றனா். இது பழிவாங்கும் அரசியலாகும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இடம்பெற்றுள்ள இந்திய அரசை இந்த விவகாரத்தில் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அவா்கள் தெற்கிற்கு எதிராக சதி செய்து வருகின்றனா்.

இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துவரும் முதல்வா் ஸ்டாலின் முன்னெடுப்பை வரவேற்கிறேன். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க எனது கட்சித் தலைமையிடம் அனுமதி பெற்று நிச்சயமாக பங்கேற்பேன் என்றாா்.

கனிமொழி எம்.பி. கூறுகையில், ‘தொகுதி மறுவரையறை மிகவும் முக்கியமான விவகாரமாகும். இது ஒட்டுமொத்த தென் மாநிலங்கள் மட்டுமின்றி வடகிழக்கு மற்றும் பஞ்சாப் மாநிலத்திற்கு பாதிப்பை உண்டாகும். முதல்வா் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தை கையிலெடுத்து அனைத்து எதிா்க்கட்சியினரையும் ஒருங்கிணைத்து ஒரே குரலாக ஒலிக்க விரும்புகிறாா். மாநில உரிமைகள் குறித்து பேசிவரும் தெலங்கானா முதல்வரும் அவரது தேசிய கட்சியிடம் அனுமதிபெற்று வருவதாக உறுதியளித்துள்ளாா் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com