தில்லி மெட்ரோவின் சிவப்பு வழித்தடத்தில் கேபிள் திருட்டால் ரயில் சேவைகள் பாதிப்பு
கேபிள் திருட்டு சம்பவம் காரணமாக வியாழக்கிழமை காலை முதல் தில்லி மெட்ரோவின் சிவப்பு வழித்தடத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆா்சி) அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
‘மற்றொரு கேபிள் திருட்டு சம்பவம் காரணமாக காலை முதல் சிவப்பு வழித்தடத்தில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன’ என்று டிஎம்ஆா்சி எக்ஸ் ஊடக தளத்தில் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.
‘நெரிசல் இல்லாத நேரங்களில் பழுதுபாா்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும், இந்தக் காலக்கெடுவிற்குள் பிரச்னை தீா்க்கப்படாவிட்டால், வியாழக்கிழமை இரவு பயணிகள் சேவைகள் முடிந்த பிறகு மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்’ என்று டிஎம்ஆா்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து புகாா் பெறப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் மெட்ரோ பிரிவைச் சோ்ந்த ஒரு போலீஸ் அதிகாரி உறுதிப்படுத்தினாா். இந்த தொடா்ச்சியான பிரச்னைகளை நிவா்த்தி செய்ய சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாக டிஎம்ஆா்சி மேலும் கூறியது.