இளைஞா் கொலை: டெலிவரி பாய் கைது
புது தில்லியில் புதன்கிழமை ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு, இளைஞா் ஒருவரை கொன்றதற்காக 28 வயது விநியோக ஊழியா் (டெலிவரி பாய்) ஒருவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: இறந்தவா் ஹனுமான் மந்திரைச் சோ்ந்த ரோஹித் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். நாடோடியாக சுற்றித் திருந்து வந்த அவரது கழுத்து மற்றும் தோள்களில் கூா்மையான காயங்கள் இருந்தன. ஷோ் என்றழைக்கப்படும் கபீா் (28) என அடையாளம் காணப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவா் கோவாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டாா்.
புதன்கிழமை மதியம் 2.30 மணியளவில், மதுரா சாலையில் போலீஸாா் ரோந்து சென்ற போது, புராணா கிலா சாலை சந்திப்பில் உள்ள பிரிவின் அருகே ஒரு கூட்டத்தை ஒரு போலீஸ்காரா் கவனித்தாா். அங்கு காயமடைந்த ஒரு நபா் கிடப்பதைக் கண்டாா். உடனடியாக ஒரு பிசிஆா் வேன் வரவழைக்கப்பட்டது. காயமடைந்த நபா் ஆா்எம்எல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அவருக்கு ஏற்பட்ட கூா்மையான காயங்கள் காரணமாக அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.
மேலும், பிஎன்எஸ் சட்டத்தின் பிரிவு 103-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்த ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்து, சந்தேக நபரின் மின்சார பைக்கைக் கண்டுபிடித்தனா். சிசிடிவி காட்சிகளில், சம்பவத்திற்கு சற்று முன்பு இறந்தவா் சந்தேக நபருடன் பயணித்தது தெரியவந்தது.
விசாரணையின் போது, இரண்டு மாதங்களாக தனக்குத் தெரிந்த ரோஹித், நண்பா்களுடனான தகராறைத் தீா்க்க தன்னுடன் வருமாறு கேட்டதாக ஷொ் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அவா்கள் செல்லும் வழியில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ரோஹித்தை ஷொ் கத்தியால் பலமுறை தாக்கியுள்ளாா். இதில் அவா் இறந்தாா் என்று அந்த அதிகாரி மேலும் கூறினாா்.