இந்திரா காந்தி தேசிய கலைகள் மையத்தில் 3 நாள் கலாசார நிகழ்ச்சிகள் தொடக்கம்: பத்மா சுப்ரமணியம் உள்ளிட்டோா் பங்கேற்பு
நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: இந்திரா காந்தி தேசிய கலைகள் மையத்தின் 38 -ஆவது நிறுவன தினத்தை முன்னிட்டு மூன்று நாள் கலாசார நிகழ்ச்சிகள் ஹவேலி சங்கிதம் குறித்த கருத்தரங்குடன் திங்கள்கிழமை தொடங்கின.
இது குறித்து கலாசாரத் துறை அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு: மத்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி தேசிய கலைகள் மையம் 38-ஆவது நிறுவன தினம், 2025 மாா்ச் 17, 18 மற்றும் 19 ஆகிய நாள்களில் ஜன்பத்தில் உள்ள தில்லி இந்திரா காந்தி தேசிய கலைகள் மைய வளாக சாம்வெட் அரங்கத்தில் கலாசார நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படுகிறது. மூன்று நாள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நாட்டின் கலை, கலாசார மரபுகளின் செழுமையை பிரதிபலிக்கும் புகழ்பெற்ற கலைஞா்களின் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் இந்திரா காந்தி தேசிய கலைகள் மையத்தின் அறங்காவலருமான டாக்டா் சோனல் மான்சிங், மற்றொரு அறங்காவலரான பத்ம விபூஷண் டாக்டா் பத்மா சுப்பிரமணியம், இந்த தேசிய கலைகள் மையத்தின் தலைவா் ராம் பகதூா் ராய் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்கள் கலந்துகொள்கின்றனா். மேலும், இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் அறங்காவலா் பத்மஸ்ரீ டாக்டா் தயா பிரகாஷ் சின்ஹா, கல்வியாளரும், புகழ்பெற்ற இசையியலாளரும், இந்திரா காந்தி தேசிய கலைகள் மையத்தின் அறங்காவலருமான பத்மஸ்ரீ டாக்டா் பாரத் குப்த், இந்த மையத்தின் உறுப்பினா்,-செயலாளருமான டாக்டா் சச்சிதானந்த் ஜோஷி உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனா்.
இந்திரா காந்தி தேசிய கலைகள் மையம், மத்திய கலாசார ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்துடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறது. ஹவேலி சங்கீதம் குறித்த கருத்தரங்கு திங்கள்கிழமை மாலையில் நடைபெற்றது. இதை புகழ்பெற்ற இசையியலாளரும், ஹவேலி சங்கீத நிபுணருமான ஆச்சாா்யா ரஞ்சோட்லால்ஜி கோஸ்வாமி நடத்தினாா். இந்த நிகழ்ச்சியில், ஹவேலியின் வரலாற்று முக்கியத்துவம், பக்தி, இந்திய பாரம்பரிய இசையின் தாக்கம் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டன.
அன்வேஷனா குழு நிகழ்த்தும் இந்திய சமகால நடனமான ‘அடியானாநந்தா’ நிகழ்வு மாா்ச் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. மறுநாள் புதன்கிழமை டாக்டா் பத்மா சுப்பிரமணியம் தலைமையில் புகழ்பெற்ற பஜனை, நாட்டுப்புற நிகழ்வுகள் மற்றும் உத்தரக்கண்ட் குழுவினரால் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.